புத்தாண்டு கால விபத்துகள், வன்முறைகள்:18 பேர் பலி 600 பேர் காயம்

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களின் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர். இவ் விபத்துக்களின் போது உயிரிழந்திருப்பவர்களில் நால்வர் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் என்றும், ஐவர் இளைஞர்கள் என்றும் ஏனையவர்கள் நடுத்தர மற்றும் முதுமை வயதை உடையவர்கள் என்றும் பொலிஸார் கூறினர்.

வாகன விபத்துக்கள், கத்திக்குத்து, கங்கைகளில் நீராடிய போது ஏற்பட்ட விபத்து மற்றும் உமா ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் விபத்து என்பன காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒன்பது பேரும், நண்பர்கள் உறவினர்களோடு கங்கைகளில் நீராடிய ஐவரும், உமா ஓயா நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் காட்டுக்குச் சென்று விறகு சேகரித்துக் கொண்டு வீடு திரும்பிய மூன்று சிறுமிகளுமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்கள் கூறினர்.

நீராடச் சென்ற 08 பேர் மரணம்

அவிஸ்ஸாவெல தெரணியகல வீதியிலுள்ள கஹனவிட்ட எல்லயில் நேற்று முன்தினம் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விடுமுறை காலம் என்பதால் நண்பர்களுடன் நீராடிய போதே இவ்வாறு இறந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் சப்ரான் (26), மயில்வாகனம், யசிகரன் (24), மொஹமட் நஜீம் (26), மொஹமட் சப்ரின் (24) ஆகியோரே இந்த இடத்தில் நீராடிய சமயம் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. ஒருவரின் சடலத்தை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை ஹபராதுவ கொக்கலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் நீரில் மூழ்கி இறந்துள்ளார். 26 வயதுடைய சுரேஷ் என்பவரே இறந்துள்ளதோடு பிரேத பரிசோதனையும் நேற்று நடைபெற்றது.

அப்புத்தளை பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று சிறுமிகளில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அப்புத்தளை போவே தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் விறகு சேகரிக்க காட்டுப்பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர். மீண்டும் வீடு திரும்பும்போது ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளம் காரணமாக அப்பிரதேசத்தினூடாக பெருக்கெடுத்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இவர்கள் காணாமல் போனதாக பொலிஸார் கூறினர்.

மறு நாள் கிரிந்த பாலத்தின் கீழ் வைத்து ஒரு சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இன்னுமொரு சிறுமியின் சடலம் உமாஓயா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

அப்புத்தளை போவே தோட்டத்தைச் சேர்ந்த எஸ். வினோதா வயது (12), எஸ். சுபாஷினி வயது (08), சபாரத்தினம் பவித்ரா வயது (8) என்ற மூன்று சிறுமிகளே இவ்வாறு பரிதாபகரமான மரணத்தை தழுவியவர்கள். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.
வாகன விபத்துக்களில் 9 பேர் பலி
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்ததோடு 50 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று காஞ்சிரங்குடா பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த 13 ஆம் திகதி மாலை இடம்பெற்றது.

பொத்துவில் பகுதியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் குடை சாய்ந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

37 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று மற் றும் திருக்கோவில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிங்குரான பகுதியில் இருந்து சுற்றுலா சென்றுவிட்டு திரும்புகையிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மூன்று பெண்களும் ஒரு ஆணுமே விபத்தில் கொல்லப்பட்டனர். சந்ராவதி (44), மல்லிகா (34), குணவதி (60), நுவன் தில்சான் (12) ஆகியோரே விபத்தில் இறந்துள்ளனர். சடலங்கள் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த விபத்து கடந்த 13 ஆம் திகதி மாலை நடந்தது.

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று முன்தினம் மாலை கவடயாமுன பகுதியில் நடந்தது.

பலாங்கொடை பின்னவல வீதியில் குருபனாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 50 வயது குடும்பஸ்தர் கொல்லப்பட்டார். தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி பாதசாரி மீது மோதியுள்ளது. இதனால் கோபாவேசமுற்ற பிரதேச மக்கள் பஸ்ஸை தீயிட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 13 ஆம் திகதி நடந்தது. லொறியொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவரில் சாரதி கடுமையான காயங்களுடன் தப்பினார். ஏனைய இருவரும் ஸ்தலத்திலேயே மரணமானார்கள்.

இச் சம்பவம் புதனன்று புத்தளம் பகுதியிலுள்ள கல்லடி என்னும் இடத்தில் இடம் பெற்றது.

புத்தளத்தில் புதுவருடத்திற்கான வியாபாரத்தினை முடித்துக் கொண்டு தமது ஊரான நிக்கவெரட்டியாவுக்கு செல்லும் வழியிலேயே இவ்விபத்து ஏற்பட்டது.

லொறி முற்றிலும் சேதமடைந்துள்ளது. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குண்டசாலையிலிருந்து திகன பிரதேசத்திற்கு உற்சவ களியாட்டத்துடன் சென்று கொண்டிருந்த லொறியொன்று வயோதிபர் ஒருவர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று (15) காலை இடம் பெற்றது.

திகன, ரஜவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளனா.குறித்த லொறி சாரதி மற்றும் லொறி ஆகியவற்றை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெல்தெனிய பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல். தர்மரத்ன தெரிவித்தார்.
கத்தி குத்துக்கு ஒருவர் பலி
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் சிலருடன் குடிபோதையில் இளைஞர் ஒருவர் சக நண்பர்களினால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
தேசிய ஆஸ்பத்திரியில் 570 பேருக்கு சிகிச்சை

இதேநேரம் பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 570 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கொழும்பு பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு நேற்று தெரிவித்தது. இதில் 411 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 159 பேர் தங்கி சிகிச்சை பெறுவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வீதி விபத்துக்கள் காரணமாக காயமடைந்து அனுமதிக்கப்பட்டவர்களின் தொகை 34 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. வீடுகளில் இடம்பெறும் மோதல் சம்பவங்கள் சார்பாக அனுமதிக்கப்பட்டவர்களின் தொகையும் ஏனைய வன்முறைகள் தொடர்பில் அனுமதிக்கப்பட்டவர்களின் தொகையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒரே அளவாகும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

பட்டாசு, மற்றும் வான வெடிகள் காரணமாக காயடைந்த ஒருவர் மட்டுமே கொழும்பு பெரியாஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் பாரியளவு குறைந்துள்ளதாகவும் ஆஸ்பத்தி தரப்பு கூறியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply