ரணிலும் ஜனாதிபதியும் ஒன்றிணைய வேண்டும்: சம்பிக்க

இலங்கைக்கு எதிராக பான் கீ மூன் இராஜதந்திர பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்துள்ளார். இதற்கு முகம் கொடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பேதங்களை மறந்து நாட்டிற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் அறிக்கையினை கண்டித்து உள்நாட்டில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு ஜனாதிபதி நேரடியாகச் சென்று ஐ.நா. வின் போர்க் குற்றச்சாட்டை தெளிவுபடுத்தி நட்பு நாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், கடந்த 12 ஆம் திகதி பான் கீ மூனிடம் நிபுணர் குழு தனது அறிக்கையை கையளித்தது. இந்த அறிக்கையானது முற்று முழுவதுமாக கண்டிக்கப்பட வேண்டியது. அத்தோடு நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஏனெனில் அவ்வறிக்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது.

பிரபாகரனையும் அவரது சகாக்கள் 47 பேரையும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் தப்பித்துச் செல்ல இடமளித்திருந்தால் இன்று இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டிருக்காது. அமெரிக்காவும் பிரிட்டனும் பின்னணியில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களில் செயற்படுகின்றது.

லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இரத்த ஆறு ஓடுவதற்கு அமெரிக்காவும் பிரிட்டனுமே காரணம். பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறி பயங்கரவாதிகளை அமெரிக்கா பாதுகாத்து வருகின்றது.

போர்க் குற்றத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் ருத்திரகுமார் உள்ளிட்ட புலி செயற்பாட்டாளர்களுக்கே வழங்க வேண்டும். ஏனெனில் புலிகளே இறுதிக் காலப் பகுதியில் பொதுமக்களை சிறை வைத்து போராடி வந்தனர்.

இலங்கை இராணுவம் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே யுத்தத்தை முன்னெடுத்தது. எதிரிகளுக்கு உணவு வழங்கிக் கொண்டுதான் யுத்தம் செய்தோம்.

எனவே சர்வதேச விசாரணைக் குழு ஒன்றிற்கு இடமளிக்காது நாட்டின் இறையாண்மைக்கு பாதுகாப்பு வழங்கி அனைவரும் செயற்பட வேண்டும் எனக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply