வில்லியத்தின் திருமணத்தை முன்னிட்டு லண்டனில் கடும் சோதனை !
பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் மிடில்டனது திருமணம் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளதை யொட் டி லண்டனில் என்றுமில்லாதவாறு பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமண ஊர்வலம் இடம்பெறவுள்ள பக்கிங்காம் மாளிகை முதல் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் வரையான பிரதேசங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட பாதுகாப்பு குழுக்களால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
வடிகால்கள், மின் கம்பங்கள், வீதி நெரிசல், தடுப்பு மின் விளக்குகள் மற்றும் ஏனைய சாத்தியமான மறைவிடங்களில் வெடிபொருட்கள் மறைத்துவைக்கப்படலாம் என்ற சந்தேகத்திலேயே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இளவரசர் வில்லியத்தின் திருமணம் நிறைவுபெறும்வரை இந்த சோதனை நடவடிக்கைகள் தொடரவுள்ளன. திருமண பந்தத்தில் இணையவுள்ள இளவரசர் வில்லியத்துக்கும் கேட்மிடில்டனுக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை வழங்கும் முகமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்கொட்லான்ட்யார்ட் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அயன் பெயார்மன் விபரிக்கையில் தாக்குதலுக்கு களமாக அமையக்கூடிய அனைத்து மறைவிடங்களும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்காக விசேட பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இளவரசர் வில்லியத்தின் திருமணமானது அண்மைய வருடங்களில் பிரித்தானியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள நிகழ்வாக விளங்குகிறது.
இந்த திருமண நிகழ்வில் அரச குடும்பத்தவர்கள், அரசியல்வாதிகள், எலிஸபெத் மகாராணி உள்ளடங்கலான அதி முக்கியஸ்தர்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட வெளிநாட்டுத்தலைவர்கள் பங்கேற்பதால் அந்நாடு பெரும் பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இளவரசரின் திருமண ஊர்வலத்தை கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply