அரசாங்கம் உரிய தீர்வைக்காண முன்வந்தால் ஐ.நா. அறிக்கைக்கு எதிராக போராடத் தயார்
இனப்பிரச்சினை உட்பட உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முன்வந்தால் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்து போராடுவதற்கு எமது கட்சி தயாராகவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத்தின் சர்வாதிகாரம், அடக்குமுறை, பழிவாங்கும் அரசியல் ஆகியவற்றை புறந்தள்ளி யாவருக்கும் சமனாக சட்டம் மதிக்கப்படுமானால் ஐ.நா.வின் அறிக்கையினால் எதுவும் செய்துவிட முடியாது. அதுமட்டுமல்லாது மின்சாரக் கதிரையில் அமர வேண்டுமே என்ற அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
ஐ.நா. இன்று எமது உள்ளக பிரச்சினைகளுக்குள் தலையிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 1988 மற்றும் 89களில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கின்றார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது பயங்கரமானது. பாரதூரமானது. இதற்கு எதிராக செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகும். இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இதே நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு இதற்கு எதிராகப் போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமானால் உள்நாட்டில் நிலவுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது தரப்பு நியாயமாகும்.
ஐ.நா. எமது பிரச்சினைகளில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. ஆனாலும் அவ்வாறானதொரு நிலைமை தற்போது ஏற்படுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 1988 1989 காலப் பகுதிகளில் பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டார். அதன் பிரதிபலனைத்தான் இன்று அனுபவிக்கின்றோம்.
பயங்கரவாதம் எனும்போது அது தமிழ்ப் பயங்கரவாதமா சிங்களப் பயங்கரவாதமா என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எதுவாக இருந்தாலும் பயங்கரவாதம் பயங்கரவாதம்தான்.
எது எப்படி இருப்பினும் உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர அந்நியர்கள் தலையிடும் அளவுக்கும் அவர்களது அழுத்தம் பிரயோகிக்கப்படும் அளவுக்கும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆனாலும் அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து அந்த அலுவலகத்தை மூடிவிடுவதற்கு அரச தரப்பினரும் தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக் கொள்வோரும் நடவடிக்கை எடுப்பார்களேயானால் அல்லது அமெரிக்கா மற்றும் நோர்வே தூதரங்களை இங்கு மூடிவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால் இந்நாட்டில் பிரச்சினை இருக்கின்றது என்றே அர்த்தமாகின்றது. எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நிகழ்கின்ற கதி தெரிந்த விடயமாகும். அவர்கள் கடத்தப்படுகின்றனர்.
காணாமல் போகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் பதிலும் இல்லை. தீர்வும் இல்லை.
தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அது அந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவும் நடப்பதாக இல்லை. இந்நாட்டைப் பயங்கரவாதத்திடம் இருந்து மீட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் வைத்துள்ள அரசாங்கத்திடம் அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அது அரசாங்கத்தினால் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
ஐ.நா.வின் அறிக்கைக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் தொடர்பிருக்கின்ற காரணத்தினால் அந்த அறிக்கைக்கு தக்க பதிலை வழங்குவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார். ஏனெனில் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு பாரிய பங்கு உண்டு. எனவே, அனைவருமாக இணைந்தே இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.
அவ்வாறு செயற்பட்டால் இலகுவாக எம்மால் சாதிக்க முடியும். அதற்கு முன்னதாக சிறையில் இருக்கின்ற சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும். இந்நாட்டின் சட்டமானது அரசுக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் ஆதரவாளர்களுக்கு சார்பாகவும் செயற்படுத்தப்படுகின்றது. அடக்குமுறை, பழிவாங்கும் அரசியல், சர்வாதிகார நிர்வாகம் ஆகியவையே இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான காரணங்களே ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு வழிவகுத்துள்ளன.
எமது நாட்டில் நிலவுகின்ற மேற்படி பிரச்சினைகளுக்கு நாமே நல்ல முறையிலான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல வேறு எந்த அமைப்பும் ஒன்றும் செய்துவிட முடியாது.
எனவே, மேற்கூறப்பட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியான தீர்வினைக் காணுமானால் ஐ.நா.வின் அறிக்கை அற்பமானதாகிவிடும். இதனைத்தான் எமது பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எடுத்துரைத்திருந்தார். ஆனால் அவர் மீது புலி முத்திரை குத்தி துரோகிப் பட்டமும் சூட்டப்பட்டது.
அந்நியர்கள் எமது உள்ளக பிரச்சினைகளில் தலையிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அந்நியர்கள் எமது பிரச்சினைகளில் தலையிடாதிருக்க வேண்டுமானால் ஐ.நா.வின் அறிக்கைக்கு பதில் கொடுக்க வேண்டுமானால் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அரசாங்கம் செய்யுமானால் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசுடன் இணைந்து ஐ.நா.வின் அறிக்கைக்கு எதிராக செயற்பட தயாராகவே இருக்கின்றது.
மாறாக சர்வாதிகாரம், அடக்குமுறை, பழிவாங்கும் அரசியல் நீடிக்குமானால் அது பாரதூரமானதாகவே அமையும். ராஜதந்திர ரீதியில் அணுகு முறைகளைக் கையாளுவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியும். அரசாங்கம் நேர்மையுடன் செயற்படுமானால் இலங்கை மீதான ஐ.நா.வின் அழுத்தத்திற்கு எதிராக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இணைத்துக் கொண்டு போராட முடியும். அதுமட்டுமல்லாது மின்சாரக் கதிரையில் அமர வேண்டுமே என்ற அச்சமும் எவருக்கும் தேவையும் இல்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply