இலங்கைக்கு உதவி செய்ய வேண்டாம் – வைகோ இந்தியாவிடம் கோரிக்கை

இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செய்ய கூடாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சங்கரன்கோவில் அருகே இலங்கை தமிழர்களுக்காக பொறியியலாளர் தீக்குளித்து இறந்தார். அவருடைய உருவ படத்துக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக வைகோ அவரின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வைகோ,
 
நெல்லை மாவட்டம் சீவகம்பட்டியை சேர்ந்த ராமசுப்பு சுப்புலட்சுமி ஆகியோரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) என்ற இளைஞன், பொறியியல் படித்து முடித்து விட்டு ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
 
இலங்கை தமிழர்களையும், அவர்களின் பச்சிளங் குழந்தைகளையும் இலங்கை அரசு கொன்று குவித்து விட்டது. இந்த கொடூர சம்பவத்தை என்னால் தாங்க முடியவில்லை என அந்த இளைஞன் தனது வீட்டிலும் நண்பர்களிடத்திலும் கூறி வந்துள்ளார்.
 
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து, வீட்டில் வைத்து இருந்த 2 லிட்டர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் பேசி உள்ளார்.
 
பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து பொலிஸார் இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி உயிரை விட்டதை தெரிந்தும், அதனை சாதாரணமான தற்கொலை என்று பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
 
இலங்கை அரசு மீது போர் குற்றம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை 3 பேர் கொண்ட குழு அமைத்து இலங்கைக்கு அனுப்பியது. அவர்களை அந்த அரசு இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இலங்கை அமைச்சர் மூலம் ஐ.நா. சபை தலைவர் அவமதிக்கப்பட்டார்.
 
இந்திய அரசு, இலங்கை அரசை பல்வேறு நிலைகளில் ஆதரித்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்ற போது அதை இலங்கை இராணுவத்தினரால் தாங்க முடியாமல், சர்வதேச எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்சென்று கொன்று, அவர்களது உடல்களை அரசு வைத்தியசாலையில் வைத்து உள்ளனர்.
 
இதுகுறித்து தமிழகத்தில் மீனவர்களை காணவில்லை என கொந்தளிப்பு ஏற்பட்டது. உடனே இலங்கை அரசு அந்த மீனவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடுகிறது. எனவே இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செய்ய கூடாது என்று கூறியுள்ளார் வைகோ.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply