இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பத்திரிகைகளில் கசிந்துள்ள ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினரின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாக நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் மீனாக்ஷி கங்கூலி கோரியுள்ளார்.
“இந்தியா தற்போது ஐ நா வின் பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இருக்கிறது. எனவே இந்த அறிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் எடுக்கப்படும் முடிவில் இந்தியாவுக்கும் ஒரு பங்கு இருக்கும் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக விழையும் இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கைகளை அதற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மீனாக்ஷி கங்கூலி கூறுகிறார்.
இந்தியா தலையிட வேண்டும்
இலங்கையில் போரினால் பாதிக்கபப்ட்டுள்ள மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்தியா அது தொடர்பில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறுகிறார். இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், போர் குற்றங்கள் இடம் பெற்றனவா என்று கண்டறிந்து தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான போதிய வழிமுறைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்ட போரின் போது அரச தரப்பினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான சான்றுகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன என்றும் மீனாக்ஷி கங்கூலி தெரிவிக்கிறார்.
மோதலற்றப் பகுதிகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் அரச தரப்பால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் பகுதிகளிலிருந்து வெளியேற முயன்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தமக்கு முன்னர் வைக்கப்படும் ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று அரசு கூறுமாயின், எது உண்மை என்பதை ஒரு வெளிப்படையான விசாரணை மூலம் தெரிவிக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பாகும் எனவும் மீனாக்ஷி கங்கூலி வலியுறுத்துகிறார்.
சீனா, ஜப்பான் போன்று இலங்கையுடன் நட்புடன் இருக்கும் நாடுகளும் இலங்கை அரசு ஒரு நியாயமான விசாரணையை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply