நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிவிட்டது : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பாக ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவு படுத்திய ஜீ.எல் பீரிஸ், ஐநா இந்த அறிக்கையை வெளியிடவோ அல்லது அதிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவோ முனையக்கூடாது எனக் குறிப்பிட்டார்.

வெறுமனே, ஆலோசனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுவுக்கு விசாரணை நடத்துமாறோ, சிபாரிசுகளை செயற்படுத்துமாறோ கூற எவ்வித அதிகாரமும் இல்லை என ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டார்.

ஐநாவின் எந்தவொரு உறுப்பு நிறுவனத்தின் தீர்மானமும் இன்றி, ஐநா தலைமைச் செயலர் தாமாகவே நியமித்த நிபுணர் குழு ஐநாகுழு என்ற அந்தஸ்த்தைப் பெறமுடியாது என்பது இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸின் வாதம்.

நாட்டில் நல்லிணக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய இந்த தருணத்தில், அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே நிபுணர்குழு அறிக்கை அமைந்திருக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.

நாட்டில் மீளவும் சரி செய்ய முடியாத அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பை இந்த அறி்க்கை ஏற்படுத்திவிடும் என்பதால் ஐநா சபை அதனை வெளியிடக்கூடாது என்றார் அமைச்சர் பீரிஸ்.

அத்தோடு இந்த அறிக்கை ஐநாவின் கட்டமைப்புக்கும் பெரும் சேதத்தையே ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்களிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply