மனித வாழ்வினுள் நுழைவதற்கு பகவானின் வழிகாட்டல் பேருதவியுள்ளன : ஜனாதிபதி மஹிந்த
எமது யுகத்தில் சிறந்த ஆன்மீகத் தலைவராக விளங்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்கள் மகா சமாதி அடைந்தமை தொடர்பாக கவலையில் ஆழ்ந்துள்ள நான் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள அவரை வழிபடுகின்ற பக்தர்களின் துயரில் நானும் பங்கேற்கின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்கள் இலங்கை பக்தர்கள் பலருக்கு ஆசிர்வாதம் வழங்கி இருப்பதை இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூர விரும்புகிறேன்.
அன்னாரது ஆன்மீகத் தலைமைத்துவத்தின் ஊடாக தம்மை வழிபட்டோருக்கு காட்டிய கருணை, சமாதானம் மற்றும் அன்பின் வழி ஆகியவை அவர்களை நல்வழிப்படுத்துவதற்குக் காரணமாய் அமைந்தன.
உலகிலுள்ள மதங்களின் கருப்பொருளில் உலக மக்களுக்கு வழிகாட்டிய பாபா அவர்கள் மதங்களை விமர்சிக்காமல் வழிபடும் வகையில் தமது பக்தர்களை ஈடுபடுத்தியமையால் மத ரீதியான சகஜீவனத்திற்கு அது வழிகாட்டியது. இந்நிலையானது மதங்களுக்கு இடையேயான புரிந்துணர்விற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
மனித வாழ்விலே பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்கள் காட்டிய கருணைக்கு அன்னார் நிறுவியுள்ள பொது சுகாதார மற்றும் கல்விசார் நிறுவனங்கள் சிறந்த உதாரணமாகும்.
மனித வாழ்வில் இன்றியமையாத அத்தியாவசிய தேவைகளில் நுழைவதற்கு அன்னாரின் வழிகாட்டல்கள் பெரிதும் உதவியுள்ளன. பிறந்த நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் துன்பத்திற்குள்ளானவர்களுக்கும், நோயாளர்களுக்கும், நிர்க்கதியானவர்களுக்கும் அன்னார் காட்டிய கருணையானது இதனை மேலும் பிரதிபலிக்கச் செய்கின்றது.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா காட்டிய ஆன்மீக வழிகாட்டலின் செய்தியானது இன, மத, மற்றும் எல்லை கடந்தது. அதனை இலங்கையிலும் பல மில்லியன் மக்கள் பின்பற்றுவதற்கு எமது கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தமையே முக்கிய காரணமாகும். பெளத்த மற்றும் இந்து தர்மமும் எமது பல்லின சமூக சம்பிரதாயங்களும் இதற்கு காரணமாக அமைந்தன.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் மறைவானது மிகவும் உத்தம ஆன்மீகத் தலைவர் ஒருவரை உலகம் இழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான மானிட பண்புகளினாலும் தலை சிறந்த சேவைகளினாலும் உலக மக்களுக்கு அருள் புரிந்த பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களுக்கு மோட்சம் கிட்டுக எனப் பிரார்த்திப்போம் இவ்வாறு, ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply