உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீன சர்வதேச விசாரணை: பான் கீ மூன்

2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு தன்னால் உத்தரவிட முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஐ.நா. விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சர்வதேச விசாரணைகள் இடம் பெற இலங்கையின் ஒப்புதல் வேண்டும்.

அல்லது ஓர் பொருத்தமான சர்வதேச அரங்கத்தில் உறுப்பு நாடுகள் இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொருத்தமான சர்வதேச அரங்கம் என்று கருதப்படுவது யாது? என்பது தொடர்பில் பான் கீ மூனின் அறிக்கையில் எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. இது ஐ.நா. பாதுகாப்புச்சபை, பொதுச்சபை, அல்லது மனித உரிமைகள் அமைப்பாக இருக்க முடியும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கலாம். இதுவே யுத்தக் குற்றத்துக்கும் காரணமாகியிருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

மேலும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குறித்து ஓர் விசாரணை நடத்தப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகம் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென பான் கீ மூன் நியமித்த குழு சிபார்சு செய்துள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருதரப்பினரும் சர்வதேச மனித நேயம் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறியமைக்கான குற்றஞ்சாட்டுமளவுக்கு ஆதாரமான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் 200 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் இணை நிறுவனங்கள் என்பனவும் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பவை பாரிய அளவில் இருதரப்பினாலும் மீறப்பட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறும் ஐ.நா. அறிக்கை அவற்றுள் சில யுத்தக் குற்றங்கள், ஏனையவை மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு அரசாங்கமும் விடுதலை புலிகளும் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என முன்வைத்த அறிக்கை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை பொது மக்களின் ஆர்வம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கருத்திற்கொண்டு பகிரங்கப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முழுமையான பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் இலங்கை அரசும் மக்களும் தேசிய நல்லிணக்க மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பான் கீ மூன் நம்புவதாக அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலை புலிகளினாலும் மீறப்பட்டதாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு முன்வைத்த தீர்மானங்களையும் விதந்துரைகளையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். அதில் சில நம்பகத்தன்மையுடைய யுத்தக் குற்றச்சாட்டுக்களும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களும் அடங்கியுள்ளன.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பரந்தளவிலான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை உட்பட நம்பகத்தன்மையுடன் கூடிய ஐந்து வகையான மீறல்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது. அதேபோன்று பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் வெளியேற முயன்ற சிவிலியன்களை படுகொலை செய்தமை உ ட்பட ஆறு வகையான மீறல்களை புலிகள் மேற்கொண்டதாகவும் நிபுணர்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்துக்கு முதலில் உள்ளதாக நிபுணர் குழுவின் விதந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை பான் கீ மூன் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த மூவரடங்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்த மூவரடங்கிய நிபுணர் குழுவில் இந்தோனேஷியாவை சேர்ந்த மர்சுகி தருஷ்மன், தென்னாபிரிக்காவை சேர்ந்த யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் அடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் பணியை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply