நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் : ரொஹான் குணரட்ன
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமேன சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.அறிக்கை தொடர்பில் உணர்ச்சிவசப்படுவதனை விடவும் உரிய பதிலளிப்பது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கு இலங்கைக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும், சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களிடமிருந்து அதிகளவு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ள்ளார்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானி ஆகிய நாடுகளில் மில்லியனுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இந்த விடயங்கள் பற்றி ஆலோசனை வழங்க நிபுணர் குழு நியமிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயற்திறன் இன்மையை உணர்த்தி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு காத்திரமாக செயற்பட்டிருந்தால் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதனை தடுத்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் சரியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எந்தவிதமான பதிலையும் அளிக்க கூடாது என்பதே பெரும்பான்மையான இலங்கை அரசியல்வாதிகளின் நிலைப்படாகக் காணப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply