நிபுணர் குழுவின் அடிப்படையற்ற தன்மை தொடர்பிலேயே தெளிவுபடுத்துவோம்: கெஹெலிய
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையின் நம்பகத்தன்மையற்ற விடயம் மற்றும் அடிப்படையற்ற தன்மை ஆகியவை தொடர்பிலேயே சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்துவோம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தவுள்ளது என்று அண்மையில் ஆளும் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எவ்வாறான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில் :
பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவின் தருஷ்மன் அறிக்கையானது எந்த வித்திலும் அடிப்படையற்றதும் நம்பகத்தன்மையற்றதுமான தகவல்களை கொண்டுள்ளது. எந்தவித ஆதாரங்களும் இன்றி தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அனைத்து விடயங்களையும் நிராகரித்துவருகின்றோம். இந்நிலையில் இது தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்போது தருஷ்மன் அறிக்கையின் நம்பகத்தன்மையற்ற விடயம் மற்றும் அடிப்படையற்ற தன்மை ஆகியவை தொடர்பிலேயே தெளிவுபடுத்துவோம்.
எமது நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறிய வகையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எமது அரசாங்கம் அறிக்கையை நிராகரித்திருந்தது.
மேலும் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவு எமது நாட்டுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே எமக்கு பாரிய ஆதரவு உள்ளது என்றார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் பான் கீ. மூன் எமது செயலாளர் ஆவார். இந்நிலையில் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மனித உரிமை பேரவை அணிசேரா நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் தெளிவுபடுத்துவோம் என்று அண்மையில் அமைச்சர்கள் சிலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply