அல்கையீதாவுடன் தொடர்பில்லை :கிலானி

பயங்கரவாத அமைப்பான அல்கையீதாவின் உறுப்பினர்களுடன் தமது நாட்டு உளவுத்துறை தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பாகிஸ்தானிய பிரதமர் யூசுஃப் ராஜ கிலானி மறுத்துள்ளார். ஏனைய நாடுகள் தங்களது சொந்த உளவுத்துறை தவறுகளுக்காக பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டுவதற்கு தான் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பின்லாடன் விவகாரத்தில், பாகிஸ்தானில் உளவுத்துறை தவறு ஒன்று நேர்ந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அவர், ஆயினும் அதற்கு பாகிஸ்தான் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியுள்ளார். ஒசாமா பின் லாடனை கொல்வதற்காக அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய இராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

பின் லாடனின் இருப்பிடம் குறித்த ஆரம்பக்கட்ட துப்புகளை பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவு நிறுவனந்தான் அமெரிக்காவுக்கு வழங்கியிருந்த போதிலும், அமெரிக்காவின் அந்த ரகசிய தாக்குதல் நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை ஒசாமா பின் லாடன் எவ்வாறு பாகிஸ்தானில் ஒளிந்திருக்க முடிந்தது என்பது குறித்து புலனாய்வு செய்யுமாறு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அல்கையீதா அமைப்பின் உருவாக்கத்தில் ஏனைய நாடுகளுக்கும் பங்கிருக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அது குறித்த உண்மைகளை அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஏனையவர்களின் தவறான மற்றும் குறைபாடுடைய கொள்கைகளுக்கு பாகிஸ்தான் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply