தன்னாதிக்கமுள்ள நாட்டின் மீது வெளிநாட்டுச் சக்திகள் குற்றம் சுமத்துவதை அனுமதிக்க முடியாது

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், சர்வதேசத்திற்கான கடப்பாடுகளையும் இலங்கை பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி வருவதாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இலங்கையின் சுயகெளரவத் தைப் பாதிக்கும் விதத்தில் தன்னாதிக்கமும், இறைமையும் மிக்க நாடொன்றின் மீது வெளிநாட்டுச் சக்திகள் சுட்டுவிரலைக் காட்டிக் குற்றஞ் சாட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

‘குற்றமிழைக்கும் வழிமுறைகளும், சட்டவிரோதமாக மனிதர்களைக் வேறு நாடுகளுக்கு கடத்தலும்’ என்ற தொனிப் பொருளில் திங்கட்கிழமை (9) கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் ஆரம்பமான ஐந்து நாள் செயலமர்வை தொடக்கிவைத்து பிரதான உரையை ஆற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் நீதியமைச்சும், அவுஸ்திரேலியாவின் சட்ட மா அதிபர் திணைக்களமும் கூட்டாக இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கெதே குளுக்மன், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் ஆகியோரும், துறைசார் நிபுணர்களும், குற்றச் செயல்களை தடுப்பதற்கு உதவும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இச் செயலமர்வில் பங்குபற்றினர். நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது :-

பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளில், உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடைத்தங்கல் நாடொன்றின் ஊடாக பெரும்பாலும் மனிதர்கள் களவாக கடத்தப்படுவது ஒரு பாரிய, மோசமான குற்றச் செயலாகும்.

குறுகியகால, இடைக்கால செயல்திட்டங்களின் மூலம் இக் குற்றச் செயலை முற்றாக ஒழித்துக் கட்டிவிட முடியாது. இதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

இலங்கை அரசாங்கம் களவாக மனிதர்களை வேறு நாடுகளுக்குக் கடத்திச் செல்வதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டத்தை அமுல்படுத்தும் அரச நிறுவனங்களும், நீதித் துறையும், சட்ட மா அதிபர் திணைக்களமும், குடிவரவு, குடியகல்வு திணைக்களமும் உளவுத் துறையும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. பிராந்தியத்திலும், சர்வதேச மட்டத்திலும் களவாக மேற்கொள்ளப்படும் மனிதக் கடத்தல்களையும் ஏனைய குற்றச் செயல்களையும், பொறுத்தவரை அவற்றைத் தடுப்பதற்கு இலங்கை தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துவரும் போது சம்பந்தப்பட்ட விஷயத்தோடு நேரடியாகத் தொடர்பற்ற போதிலும் இறைமையும், தன்னாதிக்கமும் உள்ள இந்நாட்டின் மீது வெளிச் சக்திகள் குற்றஞ் சாட்டும் தோரணையில் சுட்டுவிரலைக் காட்டுகின்றன. வல்லரசுகள் விஷயத்தில் ஒருவிதமாகவும் இலங்கை போன்ற சிறிய நாடுகள் விஷயத்தில் வேறு விதமாகவும் அணுகுமுறைகள் அமைந்திருப்பது வருத்தத் தக்கதும் எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாததும் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அண்மைய நடவடிக்கைகூட இதனையே எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் அம்சங்கள் எமது அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளன.

இந் நாட்டின் நீதித் துறை சுதந்திரமாகச் செயல்படுகின்றது. திறமையான நீதிபதிகள் இலங்கையில் கடமையாற்றுகின்றார்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply