வீதி விபத்துக்களால் மக்களின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மக்களுக்கும், சொத்துக்களுக்கும் பாரிய சேதங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்துகின்ற வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு விரிவான வேலைத் திட்டம் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.தேசிய வீதிப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு, சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது பொது மக்களின் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

வீதி விபத்துக்களின் தாக்கத்தை இப்போது முழு உலகமுமே உணர்ந்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாக இதனை கட்டுப்படுத்தும் விடயத்தில் முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென பத்தாண்டு திட்டமொன்றையும் முன்வைத்திருக்கின்றது. இது பெரிதும் வரவேற்கத் தக்கதாகும்.

என்றாலும் வீதி விபத்துக்களின் தாற்பரியத்தை முன்கூட்டியே உணர்ந்த நாம் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் தான் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவை ஏற்கனவே நியமித்தோம். இக்குழுவினர் வீதி விபத்துக்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கையிலும் வீதி விபத்துக்கள் வருடா வருடம் அதிகரித்து வருகின்றன. இதனால் ஒரு நாளுக்கு சுமார் 6 பேர் உயிரிழப்பதாக மதிப்பிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக இந்நாட்டில் 2483 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் வீதி விபத்துக்கள் காரணமாக உலகில் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் 15- 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு இடைப்பட்டவர்கள் வளமானவர்கள். நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பு செய்யக்கூடியவர்கள். இப்படியானவர்கள் குடும்பங்களைப் பராமரிக்கக் கூடியவர்கள்.

வீதி விபத்துக்களால் சுறுசுறுப்புமிக்க இளம் வயதினர் உயிரிழப்பதும், மிக மோசமான காயங்களுக்கு உள்ளாவதும் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு மதுப்பாவனையுடன் வாகனங்களை செலுத்துதல் ஏற்கனவே முக்கிய காரணமாக விளங்கின.

ஆனால் இப்போது வாகனங்களைச் செலுத்துவதற்கு ‘லைசன்ஸ்’ பெற்றிராதவர்கள் வாகனங்களை செலுத்துவதாலேயே அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்திருக்கின்றது. இவர்கள் வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளைப் பேணாததே இதற்குக் காரணம். இவ்விடயத்தில் பொலிஸார் விஷேட கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் முறையாக செயற்படுத்தப்படுவதற்காக வீதிப் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம். நாட்டின் அபிவிருத்திக்கு, வீதி அபிவிருத்தி இன்றியமையாதது.

அந்தடிப்படையில் வீதிகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம். ஆனால் வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியை விடவும் வீதி விபத்துக்களுக்கு உள்ளாவோருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பெருந்தொகை நிதியை செலவிடும் நிலமை ஏற்பட்டிருக்கின்றது.

இதற்காக சுகாதார அமைச்சுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்களை வருடாவருடம் ஒதுக்குகின் றோம். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத் தும்போது அவற்றுக்கு உள்ளாவோருக்குச் சிகிச்சை அளிக்கவென ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபா நிதி மீதமாகும். அவற்றையும் நாட்டின் அபிவிருத்திக்கு செலவிட முடியும்.

இதேநேரம் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொது மக்களுக்கும் அறிவூட்டவேண்டும். பாடசாலை பருவ குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் மத்தியில் இதனை முன்னெடுப்பது அவசியம். அன்று பொலிஸார் பாடசாலை களுக்குச் சென்று வீதி ஒழுங்குகள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டினர்.

அந்த நிலைமை மீண்டும் உருவாக வேண்டும். பொது மக்களும் வீதி போக்குவரத்து ஒழுங்குகளை பேணி நடப்பார்களாயின் அதனூடாகவும் வீதி விபத்துக்கள் பெரிதும் குறைவடையும், வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் கவனயீனமாக நடமாடுவதாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

நாம் அதிவேக ரயில் சேவையையும் அறிமுகப்படுத்தவிரு க்கின்றோம். ஆகவே வீதி போக்குவரத்து ஒழுங்குகள் குறித்துபொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என நம்புகின்றேன். என்றாலும் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை விடுவிடுத்தது போல் வீதி விபத்து கோரங்களிலிருந்தும் நாட்டை விடுவிப்போம். இதற்கான வேலைத் திட்டங்கள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, பி. தயாரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply