சரணடைந்த புலிகளின் பட்டியல் கிடைக்காத நிலையில் அடுத்தகட்டம் தொடர்பில் பேசுவதில் அர்த்தம் இல்லை: கெஹெலிய

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைவது தொடர்பான கோரிக்கை அமெரிக்க தூதுவர் ஊடாக நோர்வேயினால் முன்வைக்கப்பட்டபோது நாங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் சரணடைபவர்கள் தொடர்பான பட்டியலை கேட்டோம். ஆனால் பட்டியல் எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் பட்டியலை வழங்குவதே முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கவேண்டும். பட்டியல் கிடைக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் பேசுவதில் அர்த்தம் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை கூறினார். புலிகள் யுத்தத்தின்போது சரணடைய முன்வந்ததாகவும் ஆனால் அந்த கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டதாகவும் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் அரசாங்கதத்தின் நிலைப்பாடு என்னவென்றும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் : விக்கிலீக்ஸ் என்பது ஒரு இணையதளம். எனவே அடிப்படையில் ஒரு இணையளத்தின் செய்திக்கு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் பதிலளித்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை.

இராஜதந்திர ரீதியில் அரசாங்கங்கள் அல்லது நாடுகள் ஏதாவது விடயத்தை முன்வைத்தால் அது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் இராஜதந்திர அடிப்படையில் பதிலளிக்கலாம். இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.

எனினும் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் உள்ள விடயம் குறித்து ஒன்றைக் கூறவேண்டும். அதாவது அப்போதைய அமெரிக்க தூதுவர் ஊடாக நோர்வே புலிகளின் சரணடைதல் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவித்ததாகவே விக்கிலீக்ஸில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கட்டத்தில் அரசாங்கம் சரணடையப்போகின்றவர்களின் பட்டியலை வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. எனினும் செஞ்சிலுவை சங்கம் எமக்கு பட்டியலை வழங்கவில்லை. படடியலை வழங்குவதே முதற்கட்ட நடவடிக்கையாகும். அதனை வழங்காத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் பேசுவதில் அர்த்தமில்லை என்றார்.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக ( நேற்று) கூறப்படுகின்றமை தொடர்பில்?

பதில்: ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு முன்னரும் இவ்வாறான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் எமது நிலைப்பாட்டை மிகவும் தெளிவான முறையில் முன்வைத்துள்ளோம்.

ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஒரு கட்டமைப்பாகும். அதனுள் எமக்கு ஆதரவான நாடுகளும் உள்ளன. எனவே அவற்றைக் கொண்டு எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம்.

கேள்வி: ஐ.நா. அறிக்கை விடயத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாக கூறப்படுகின்றதே?

பதில்: ஒரு இரட்டை வேடமும் இல்லை. மக்களின் பிரதிநிதிகள் ஜனநாயக நாட்டில் கருத்துக்கூறும் உரிமையுடையவர்கள். அவர்கள் பல கருத்துக்களை கூறலாம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் ஒரு நிலைப்பாட்டையே முன்னெடுக்கின்றோம். கேள்வி: ஆளும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று மேதின ஊர்வலத்தில் பான் கீ. மூனின் உருவப்படத்தை எரித்ததே? இதனை அரசாங்கம் ஏற்கின்றதா? பதில்: அது பான் கீ. மூனின் உருவப்படமா? அல்லது சோமவங்சவின் உருவப்படமா? என்று சரியாக தெரியவில்லை. நான் சரியான முறையில் காணவில்லை.

கேள்வி: அதாவது வெளிநாடுகளுக்கு ஆங்கில மொழியிலும் உள்நாட்டவர்களுக்கு சிங்கள மொழியிலும் வெவ்வேறான விடயங்களை அரசாங்கம் வெளியிடுவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளதே?

பதில்: இங்கு தெளிவாகின்ற விடயம் என்னவெனில் ஜே.வி.பி.க்கு ஒரு மொழி விளங்கவில்லை. அது எந்த மொழி என்று எனக்கு தெரியாது.

கேள்வி: மட்டக்களப்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாரே? அது தொடர்பில் ? பதில்: அது தொடர்பில் எனக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. பொலிஸ்மா அதிபரிடம் விடயங்களை தெரிந்துகொண்டு கூறுகின்றேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply