தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும் :திஸ்ஸ அத்தனாயக்க

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும். இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தலையீடுகளை மேற்கொள்ள தவறியமையினாலேயே சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தோல்வியடைந்தார். அதே பிரச்சினையை தீவிரமாகக் கொண்டு பிரசாரம் செய்தமையால் பெரும்பான்மை ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் போலி இனப்பற்றையும் உணர்வுபூர்வ செய ற்பாட்டையும் தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்பட்டு புதிய தமிழக ஆட்சியின் ஆதரவை வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தனாயக்க கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்தே இந்தியாவின் தமிழகத்தின் ஆட்சி நிர்ணயிக்கப்பட்டது. தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருணா நிதியின் செயற்பாடுகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமின்றி குடும்ப ஆட்சி பாரிய ஊழல் மோசடி என்பனவும் ஆட்சி மாற்றத்திற்கு காரணிகளாக அமைந்தன.

எவ்வாறாயினும் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அ.தி.மு.க. வின் செயலாளர் செல்வி ஜெயலலிதா கடுமையாக செயற்பட்டதுடன் அதனையே தேர்தல் பிரசாரத்திற்கும் பயன்படுத்தினார். இதுவே தமிழக ஆட்சி மாற்றத்திற்கு பாரிய காரணியாக அமைந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். எனவே எதிர்வரும் நாட்களில் இலங்கை அரசாங்கம் மிகவும் சிறந்த முறையில் இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடன் அணுக வேண்டும்.

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய முதல்வருக்கு விளக்கமளிப்பது சிறந்தது. ஏனெனில் ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றெல்லாம்ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் வெற்றி ஈட்டிய பின்னரும் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் பாரதூரமான கருத்துக்களையே வெளியிட்டு இருந்தார். எனவே எதிர்வரும் நாட்களில் புத்திசாலித்தனமாக அரசாங்கம் நடந்துக் கொள்ளாவிடின் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply