அமைச்சர்கள் ஜீ.எல்.-கிருஸ்ணா இன்று சந்திப்பு

இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று புதுடெல்லி சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். புதுடில்லியில் உள்ள ஒப்ரோய் விடுதியில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடவுள்ளார்.

ஐ.நா அறிக்கையில் யுத்த குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக இந்தியாவின் ஆலோசனைகளையும் உதவியையும் இச்சந்திப்பின்போது ஜி.எல்.பீரிஸ் கோரவுள்ளார்.

புதுடெல்லிக்கான இந்த விஜயத்தின்போது இந்தியாவின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை , ஜி.எல்.பீரிஸ் சந்திக்கப் போவதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கான நேரம் இதுவரை ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனவே பிரதமருடனான இந்தச் சந்திப்பு பெரும்பாலும் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று புதுடில்லி ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை வழக்கமாக வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான அதிகாரபூர்வ பேச்சுக்கள் வெளிவிவகார அமைச்சின் செயலகங்களில் தான் இடம்பெறுவதுண்டு. ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, ஜி.எல்.பீரீஸை ஒப்ரோய் விடுதியிலேயே சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், புதுடில்லிக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை நாடு திரும்பவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply