அறிக்கை தொடர்பில் யாருக்கும் பதிலளிக்கமாட்டோம், ஆனால் தெளிவுபடுத்துவோம்: லக்ஷ்மன்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் நாங்கள் யாருக்கும் பதிலளிக்கமாட்டோம். ஆனால் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் இராணுவ மற்றும் அரசியல் இராஜதந்திர ரீதியில் தெளிவுபடுத்தல்களையும் கருத்துக்களையும் வெளியிடுவோம் என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் பிரதியமைச்சருமான தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் சபையின் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் எந்த வகையிலும் யாருக்கும் பதிலளிக்காது என்பதனை தெரிவிக்கவேண்டும். ஆனால் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள முடியும். அந்த விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க முடியும். ஆனால் பதிலளிக்கமாட்டோம்.

அதாவது எமக்கு எதிராக யாராவது பொய் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தால் அது தொடர்பில் தெளிவுபடுத்தலை மேற்கொள்ளலாம். எமது எதிர்ப்பை வெளியிடலாம். பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை. அதுபோன்று இந்த விடயத்தில் நாங்கள் அறிக்கையின் சில விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வோம்.

தற்போதைக்கும் வெளிநாடுகளில் நாங்கள் எமது தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். மேலும் இராணுவ ரீதியாகவும் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும். அதேவேளை அரசியல் இராஜதந்திர ரீதியிலும் தெளிவுபடுத்தப்படும்.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் அரசாங்கம் எந்தளவு மனிதாபிமானமாக நடந்துகொண்டது என்று அனைவருக்கும் தெரியும். இடம்பெயர்ந்த நிலையில் வந்த மக்களுக்கு அரசாங்கம் எந்த வகையிலான சேவைகளை வழங்கியது என்று கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உலக சுகாதார அமைப்பும் யுனிசெப் அமைப்பும் சான்றிதழ்களை வழங்கியுள்ளன. இவ்வாறு நிலைமை இருக்கையில் மூன்று வருடங்களுக்கு பின்னர் வந்து கேள்வி எழுப்புவது ஏன் என்று புரியவில்லை.

இதேவேளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று யாரும் இல்லை. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் சார்பிலும் உள்ளனர். எனவே அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவோம்.

கேள்வி: யுத்த வெற்றிக்காக எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது?

பதில்: அது தொடர்பான விபரம் என்னிடம் இல்லை. அதனை நீங்கள் பாதுகாப்பு அமைச்சிடம்தான் கேட்கவேண்டும். ஆனால் யுத்தகாலத்தில் ஒரு வினாடிக்கு நாலாயிரம் ரூபாவை செலவழித்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் தற்போது அதனை நாங்கள் நினைவுகூருவது அவசியமாகும். அந்த வெற்றியை நினைகூரவேண்டும். இராணுவ வீரர்களுக்கு கௌரவத்தை அளிக்கவேண்டியது அவசியம். மே தினத்தை நாங்கள் ஏன் கொண்டாடுகின்றோம்? தொழிலாளர்களின் வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடுகின்றோம். எனவே இது தேவையாகும்.

கேள்வி: இந்த செலவுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதா?

பதில்: அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கும். கேள்வி: வெற்றிவிழா ஒத்திகை காரணமாக போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளனவே? அதற்கான நாட்களை குறைத்திருக்கலாம் அல்லவா? பதில்: ஒரு காலத்தில் அந்தப்பக்கமாகவே செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதே? கேள்வி: இருந்தாலும் தற்போது போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதை குறைக்கலாம் தானே? பதில்: நீங்கள் கூறுவதைப்போன்ற சிக்கல் இருப்பதாக தெரியவில்லை.

சுற்றுலாத்துறை வளர்ச்சி

இதேவேளை நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியை அடைந்துவருகின்றது. இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் ஆசியாவின் சுற்றுலாத்துறை 5 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தெற்காசியாவின் சுற்றுலாத்துறை 10 வீதம் வளர்ச்சிகண்டுள்ளது. அந்த வகையில் இந்தக் காலாண்டில் இலங்கையின் சுற்றுலாத்துறை 43 வீதம் வளர்ச்சிகண்டுள்ளது.

இம்மாதம் 30 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை திறந்துவைக்கின்றோம். ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை பொறுத்தமட்டில் முறையான முதலீட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கே நாங்கள் அனுமதியளித்துவருகின்றோம். அண்மையில்க்கூட 823 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சுற்றுலாத்துறை முதலீட்டுத் திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply