உதயன் பத்திரிகையின் செய்தியாளர் கவிதரன் மீதான தாக்குதலை சிறிரெலோ வன்மையாக கண்டிக்கிறது
உதயன் பத்திரிகையின் செய்தியாளர் கவிதரன் மீது நேற்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தினை சிறிரெலோ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் உலகநாடுகளிற்கு கூறிவரும் இந்நிலையில் யாழ் மண்ணில் ஊடகவியலாளன் மீது மீண்டும் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதானது அரசாங்கத்தின் கூற்றைபொய்ப்பிப்பதாகவே அமைந்துள்ளது.
உண்மைச்செய்திகளை என்றும் எம் மக்களிற்காக வெளிக்கொண்டுவரும் உதயன் பத்திரிகை மீதும் அதன் ஊழியர்கள் மீதும் பலதடவைகள் சுயலாப அரசியல் நடாத்திவருபவர்களினால் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டது எம்மக்களிற்கு நன்கு தெரியும்.
சுயலாப அரசியல் நடாத்தி வருபவர்களின் பிழைகளையும் குற்றங்களையும் வெளிக்கொண்டுவருகின்றபோது அவர்களினால் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் அன்று தொட்டு இன்றுவரை இடம் பெற்றுவருகின்றது. இதனை அரசாங்கம் கண்டும் காணாமலும் இருப்பதானது எம்மக்களிற்கு வேதனையைத்தருவதுடன் எம்மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பினை அரசாங்கம் இழக்கநேரிடும் என்பதனையும் நாம் இந்த தருணத்தில் அரசாங்கத்திற்கு சுட்டிகாட்டவிரும்புகின்றோம்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் யாழ் மண்ணிற்கு வருகைதரவிருக்கின்ற 24 மணிநேரத்திற்கு முன்னர் ஊடகவியலாளன் தாக்கப்பட்டிருக்கும் நிலைமையானது யார் வந்தாலும் தமது அடாவடித்தனங்கள் யாழ் மண்ணில் தலைவிரித்தாடும் என்பதனை சுயலாப அரசியல் நடாத்திவருபவர்கள் உறுதிப்பட கூறுவதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு அடாவடித்தனங்களால் மக்களையும் ஜனநாயகத்தினையும் அடக்கி ஆளமுற்படும் அரசியல்வாதிகளை எம்மக்கள் ஒன்று சேர்ந்து கரம் கோர்த்து இனிவரும் காலங்களில் ஒதுக்கிவைக்க வேண்டும் என சிறிரெலோ கட்சி கேட்டுக்கொள்கின்றது.
எது எவ்வாறு இருப்பினும் ஊடகவியலாளன் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மக்களின் நலம் பேணும் கட்சி என்றவகையில் சிறிரெலோ கட்சி வேண்டுகோள்விடுக்கிறது.
ஊடகச்செயலாளர்
எஸ்.செந்தூரன்
சிறிரெலோ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply