மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை: சமரசிங்க

மனித உரிமை ஆணைக்குழு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள் நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது முழுமையாக இயங்கிவருகின்றது. அத்துடன் இந்த ஆணைக்குழுவானது இடம்பெயர்வு உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது என்று மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐ.நா. முறைமை மற்றும் அதன் சர்வதேச பங்காளிகளான குறிப்பாக மனித உரிமை பேரவையுடன் பரஸ்பரம் கௌரவம் ஒத்துழைப்புடன் அதன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை முன்னெடுக்க இலங்கை எதிர்பார்க்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமப் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தனது உரையில் மேலும் கூறியதாவது 30 வருடகால நெருக்கடிக்கு நிலைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நடவடிக்கையாக அரசாங்கம் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. சுமார் 2 இலட்சத்து 96 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் பாதுகாப்பு உணவுகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. 95 வீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். கண்ணிவெடி அகற்றல் முடிவடைந்ததும் அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்படுவார்கள்.

இதேவேளை அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்டுவருகின்றது. அரசியல் சட்ட ஜனநாயக மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்திவருகின்றது.

மேலும் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகளின் சில விதிகளை நடைமுறைப்படுத்திவருகின்றோம். அதாவது அதியுயர் பாதுகாப்பு வலயத்தை குறைப்பது, ஓமந்தை தடுப்பு முகாமை மூடுதல், முன்னாள் போராளிகளை விடுதலை செய்வது, காணி பிரச்சினை தொடர்பில் தீர்மானித்தல், சட்டவிரோத ஆயுதங்களை எக்குழுவினரும் வைத்திருக்காதிருப்பதை உறுதி செய்வதுடன் அவற்றை ஒப்படைப்பதற்கான கால வரையறையை வழங்குவது போன்ற சில விதந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் ஊக்குவிப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்தின் யோசனைகளுக்கு ஏற்ப இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் அதனை ஊக்குவிப்பதிலும் மிகவும் உறுதியான கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

சிவில் சமூகம் மற்றும் அதற்கு ஈடான அரச அமைப்புக்களின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புக்களின் ஊடாக இது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த செயற்பாட்டு வேலைத்திட்டமானது அமைச்சரவையின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியதருகின்றேன்.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை ஆணைக்குழு மீள் நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது முழுமையாக இயங்கிவருகின்றது. அத்துடன் இந்த ஆணைக்குழுவானது இடம்பெயர்வு உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.நா. முறைமைகளின் கீழ் எமது நோக்கமானது பொருத்தமானதொரு பங்கீடாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு உறுப்பினர் என்ற வகையில் நாங்கள் நம்புகின்றோம். இலங்கை அதன் உரிமைகளையும் கடமைகளையும் பொறுப்புகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் முறைமையுடன் ஆழமாக எடுக்க விரும்புகின்றது. அரசாங்கம் நல்லிணக்கப்பாட்டை நோக்கி முன்செல்கின்றது என்பனை குறிப்பிடுகின்றோம்.

ஐ.நா. முறைமை மற்றும் அதன் சர்வதேச பங்காளிகளான குறிப்பாக மனித உரிமை பேரவையுடன் பரஸ்பரம் கௌரவம் ஒத்துழைப்புடன் அதன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை முன்னெடுக்க இலங்கை எதிர்பார்க்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply