மரணத்துக்குக் குழிதோண்டும் புகைபழக்கம்

கலங்களால் உருவாக்கப்பட்ட உடலமைப்பிற்கு கடவுளால் ஆறறிவு ஊட்டப்பட்டு தோற்றம் பெற்றவர்களே மனிதர்களாகிய நாம். அந்த கலங்களுக்கு நெருப்பை ஊட்டும் நெஞ்சங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்படும் தினமே இப்புகையிலை எதிர்ப்பு தினமாகும் உலகளாவிய ரீதியில் மரணத்தை விளைவிக்கும் காரணிகளில் இரண்டாம் இடத்தைவகிப்பது புகையிலை பாவனை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி இவ்வருடம் 5 மில்லியன் மக்கள் புகைத்தலின் காரணமாக இறந்திருப்பதுடன் அதில் 600,000 மக்கள் இப்புகையிலை புகைகை நுகர்வதனால் உயிர்நீத்துள்ளனர் என்பது கவலைக்குரியது.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எனும் கூற்று பொய்த்து இன்றைய இளைஞர்கள் நாளைய புகைஊதுனர்கள் எனும் வகையில் 13௧8 வயதிற்குட்பட்ட புகையிலை பாவனையாளர்களின் எண்ணிக்கை 7 இல் 1 ஆக அதிகரித்துள்ளமை நெஞ்சை சுடும் விடயமாக உள்ளது.

சர்வதேசரீதியில் ஒவ்வொரு 8 செக்கனிற்கும் ஒருவர் புகையிலையால் இறப்பதுடன் இலங்கையில் ஒவ்வொரு 6.5 செக்கனிற்கும் ஒருவர் இறக்கின்றனர். அதுமட்டுமன்றி இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இந்தப் பழக்கத்தால் இறப்பதுடன் நாளொன்றுக்கு 4,101 மில்லியன் புகையிலை உற்பத்திகள் விற்பனையாகின்றன என்பது அதிசயிக்கத்தக்கதன்று.

புகையிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை இலகுவான விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்கினால், புகையிலை புகையில் காணப்படும் நிக்கொட்டின் எனும் பதார்த்தம் இதயத்துடிப்பு வீதத்தை தற்காலிகமாக அதிகரிப்பதுடன் குருதியமுக்கத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் சிகரட் புகைத்தல் சுவாசப்பை சிறு குழாய்களில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் இதன் விளைவாக மூச்சு விடுதல் கடினமாகிறது. அதுமட்டுமன்றி நமது சுவாசப்பை தொகுதியில் உள்ள பிசிர் தொழிற்பாடுகள் இழக்கப்படுவதால் வாயுப் பரிமாற்றத்திற்கான வினைத்திறன் வாய்ந்த பரப்பும் குறையும்.

புகையிலையின் புகையில் காணப்படும் காபன்மொனோக்சைட்(ஊழு)வாயு குருதியினால் உறிஞ்சப்பட்டு ஈமோகுளோபின் உடன் மீளாத்தன்மையாக சேருகின்றது.ஒட்சிசன் வாயுவிலும் பார்க்க இவ்வாயு வினைத்திறனாக ஈமோகுளோபின் உடன் சேரும்.இதனால் குருதியில் ஒட்சிசன் கடத்தப்படும் அளவு குறையும்.

இவை ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் எனும் அதேவேளை இயற்கை அன்னையின் கொடையாகிய சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை. இவ்வனைத்து பாதிப்புக்களுக்கும் தீர்வு காணும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிய முயற்சிகளைக் மேற்கொண்டு வருவதுடன் உலக நாடுகளும், ஊடகவியலாளர்களும், தனிநபர் மற்றும் நிறுவனங்களும் எவ்வளவுதான் துண்டுபிரசுரங்களினூடாகவும்,பத்திரிகைகளினூடாகவும்,சுவரொட்டிகளினூடாகவும்,ஒளித்தோற்றங்களினூடாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

எனினும் 2025 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 8 மில்லியனாக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தினால் எதிர்ப்பார்க்கப்படுவது ஏன்? வருமானத்திற்கென புகையிலை உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்களாளா அல்லது ‘புண்பட்ட நெஞ்சங்களை புகைவிட்டு ஆற்றும்’ கோழைகளாளா! நம்முடைய சிந்தனைகள் இன்னும் அறியாமையில்தான் இருக்கின்றன,அவற்றை நாம் புகையின்றி ஒளி பெறச்செய்ய வேண்டும்.

நன்றி பா.ரம்யா

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply