சரணடைந்த புலி உறுப்பினர்களை இராணுவம் சுட்டுக்கொல்லவில்லை: சவேந்திர சில்வா

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் சரணடைந்த புலி உறுப்பினர்களை இராணுவம் சுட்டுக்கொல்லவில்லை. உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் சர்ச்சைக்குரிய விடயமாக காணப்படும் வெள்ளைக் கொடி விவகாரத்துக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று 58ஆவது படையணியின் முன்னாள் தளபதியும் ஐ.நா. விற்கான இலங்கையின் பிரதி வதிவிட பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களை பணயக் கைதிகளாக புலிகள் இயக்கத்தினர் வைத்துக் கொண்டு இராணுவத்தினரை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்டனர். யுத்த சூனிய வலயத்திற்கு தப்பித்து வந்த பொது மக்கள் மீது புலிகளே துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்த வெற்றி அனுபவங்கள் தொடர்பான செயலமர்வின் இரண்டாவது நாள் அமர்வு நேற்று புதன்கிழமை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி 53 மற்றும் 55ஆம் படையணிகள் வடக்கை நோக்கிய தரைவழி தாக்குதல்களை புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கையில் பளை இராணுவ வசமானது. 4ஆம் மற்றும் 2ஆம் அதிரடிப்படையணிகள் 53, 55ஆம் படையணிகளுடன் இணைந்து புலிகளின் முன்னரண்களை நோக்கி வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு முன்னோக்கி நகர்ந்தனர். இந்த முன்னகர்வுகளின் போது 58 மற்றும் 57ஆவது படையணிகளும் வெவ்வேறு திசைகளின் ஊடாக முன்னர்கையில் பரந்தன் உட்பட புலிகளின் தலைமையகமாக கருதப்பட்ட கிளிநொச்சியையும் இராணுவம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.,

ஏ9 வீதியை படையணிகள் தக்க வைத்துக் கொண்டு, புலிகளால் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து விடுபடும். அப்பாவி மக்களுக்கு தேவையான உணவு உட்பட அடிப்படை தேவைகள் அனைத்தையும் இவ்வீதியூடாக ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட தொண்டு நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

இராணுவ முன்னெடுப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் புலிகள் கல்மடு அணைக்கட்டை உடைத்து விட்டு பின்னகர்ந்தனர். தொடர் தரை மற்றும் வான் வழி தாக்குதல்களின் மூலம் புலிகளை குறுகிய நிலப்பரப்புக்களுக்குள் வைத்துக் கொள்ளவும். கைப்பற்றப்பட்ட ஏனைய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் படையணிகளுக்கு முடிந்தமை இறுதி நகர்வுகளுக்கு பாரியளவில் வலு சேர்த்தது.

2009ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக் காலப்பகுதியில் கடற்புலிகள் தளமாக விளங்கிய சாலை உட்பட முல்லைத்தீவு கடற்பரப்பை 58ஆவது மற்றும் 59,ஆம் படையணிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் பெரிய மன்னார் கைப்பற்றலுடன் இராணுவம் மேற்கொண்ட விஸ்வமடு, முல்லைத்தீவு நோக்கிய முன்னெடுப்புகள் மூலம் புலிகளின் தொடர்பாடல்களும், உதவிகளும் முற்றாக இடைநிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும் புதுமாத்தளனில் அறிவிக்கப்பட்ட யுத்த சூனிய பிரதேசத்திற்கு ஏராளமான பொது மக்கள் வந்து கொண்டிருந்தனர். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், மக்களுக்குள் ஊடுருவியுள்ள புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளை இனம் காண்பதும், பணயக்கைதிகளாக புலிகள் வசம் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுப்பதும் பாரிய சவாலான விடயமாகவே படைத் தளபதிகளுக்கு காணப்பட்டன.

எவ்வாறாயினும் அனைத்து படையணிகளின் தளபதிகளும் ஒன்றுகூடி தந்திரோபாய முன்னெடுப்புகளின் ஊடாக மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்தோம். இந்த முன்öனடுப்புக்களின் போது புலிகள் தற்கொலை தாக்குதல்களையும் மேற்கொண்டனர். அது மட்டுமின்றி பயணக் கைதிகளாக இருந்து தப்பித்து வரும் மக்கள் மீது புலி உறுப்பினர்கள் சரமாரியாக சுட்டனர். 58ஆவது படையணியின் தலைமையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வரும் மக்களை பராமரிக்க நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கு மக்களோடு ஊடுருவியும் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அத்தோடு யுத்த சூனிய வலயத்திற்குள் புலிகள் கனரக தாக்குதல்களையும் மேற்கொண்டனர். இவ்வாறு மக்களை பாதுகாத்துக் கொண்டு இராணுவம் புலிகள் நிலை கொண்டிருந்த இறுதி நிலப்பரப்புகளை முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் மற்றும் இதனை அண்டிய புதுமாத்தளை வடக்கு பகுதிகளையும் நோக்கிய பாரிய நகர்வுகளை அனைத்து படையணிகளும் முன்னெடுத்தன. இதன்போது புலிகள் முழு அளவில் செயலிழந்ததுடன் பிரபாகரனின் உடலும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் மக்களை நோக்கி சுடவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வந்தவர்களை அவர்களே சுட்டனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply