பொதுமக்களை பதிவு செய்வதை நிறுத்துங்கள்: மாவை

ஆயுதப்படையினர் மற்றும் பொலிஸார், பொது மக்களைப் படம் பிடித்து பதிவு செய்யும் நடவடிக்கையானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கிராமப்புறங்களில் கிராம அலுவலர்கள் ஊடாக பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைக் கண்டித்துள்ள அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது

இராணுவத் தரப்பினரோ பொலிஸாரோ தாம் விரும்பியவாறு பொதுமக்களை குடும்பம் குடும்பமாகப் படம் பிடிப்பதும் பதிவுகளை மேற்கொள்வதும் சட்டவிரோதமான தவறான அச்சுறுத்தல் நிறைந்த செயலாகும் இதனை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கின் தீர்ப்பின்படி ஆயுதப்படையினரின் இத்தகைய அத்துமீறல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது இராணுவத் தரப்பின் பொறுப்பதிகாரிகளும் படைத்தரப்பினரிடம் படம்பிடித்து பதிவுகளை செய்ய உத்தரவிடவில்லை எனக் கூறி வந்தனர்.

தற்போது மீண்டும் பொதுமக்கள் படம்பிடிக்கப்பட்டு படைத்தரப்பினராலும் பொலிஸாராலும் பதிவு செய்யப்படுகின்றனர் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அது உண்மையாயின் இச்செயலானது சட்டவிரோதமானதும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகவும் அமையும்.

இராணுவத் தரப்பிற்கோ பொலிஸாருக்கோ இவ்வாறு பதிவுகளை மேற்கொள்வதற்கு கடமைப்பாடு ஒன்றுமில்லை. இச்செயல்களினால் பொதுமக்கள் அச்சத்துக்கும் பீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகின்றனர். இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது எங்களுக்குத் தகவல் தருமாறு மக்களை நாம் கோட்டுக்கொள்கின்றோம்.

நாம் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அனுகி ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புக்கு மாறாக பொது மக்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தவும் அத்தகையவர்களுக்கு எதிராக நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கவும் கோருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply