பொலிஸ்மா அதிபர் மாத்திரம் அல்ல பாதுகாப்பு செயலாளரும் விலகவேண்டும்: ஐ.தே.க

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் இறந்தமைக்காக பொலிஸ்மா அதிபர் மாத்திரம் அல்ல பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டும். குறித்த இளைஞனின் கொலையினை முன்வைத்து நாம் அரசியல் செய்வதற்கு முற்படவில்லை. மக்களது உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். இதற்காகவே எதிர்வரும் வியாழக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து மருதானை சந்தியில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக அன்று அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பொலிஸ் அதிகாரி ஒருவர் அசௌகரியப்படுத்தப்பட்ட நிலையிலும் தாக்குதல் நடத்தாக பொலிஸார் கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் அப்பாவி ஊழியர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்துவதன் மூலம் தெரிவிக்கப்படுவது என்ன?

ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் பொலிஸார் போன்று வேடமணிந்த பலரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. அவ்வாறு பொலிஸ் வேடம் அணிந்து வந்தவர்கள் யார்? ஆர்ப்பாட்டங்களின்போது அதனை கலைப்பதற்காக கண்ணீர் புகைக்குண்டு பிரயோகமும் ரப்பர் தோட்டாக்களுமே பயன்படுத்த முடியும். ஆனால் உயிர் கொல்லி தோட்டாவை பயன்படுத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டது யார்?

உயிரிழந்த சானக்கவின் இறுதிச் சடங்கில் மக்கள் கலந்துகொள்ளும் உரிமையையும் அரசாங்கம் பறித்துக்கொண்டுள்ளது. கட்டுநாயக்க சம்பவத்தை காரணம் காட்டி பொலிஸ்மா அதிபரை பதவி விலக வைத்து அரசாங்கம் மக்களை மற்றுமொரு முறை ஏமாற்றியுள்ளது. பொலிஸ்மா அதிபர் தற்போது பதவி விலகினாலும் விரைவில் முன்னேற்றமடைந்த நாடொன்றுக்கு தூதுவராக நியமிக்கப்படுவது உறுதியாகும்.

எனவே இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபர் மாத்திரம் அல்ல பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டும். ஒரு அமைச்சர் பல்கலைக்கழக தொகுதியில் நகைச்சுவை மேற்கொள்கின்ற நிலையில் மற்றுமொரு அமைச்சர் பாடசாலை அதிபர்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்க முற்படுவதன் மூலம் நாட்டில் ஒரு குடும்பம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதால் அமைச்சர்கள் என்ன செய்வதன்று தெரியாது செயற்படுகின்றனர் என்பது தெரிகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply