வன்னி யுத்தத்தின் போது இமல்டா சுகுமார் கடைப்பிடித்த மௌனத்தின் அர்த்தம் புரிகிறது – சிவாஜிலிங்கம்
இனப் படுகொலை செய்பவர்களை விட அதனை மூடி மறைப்பவர்களையும் அதனை நியாயப்படுத்து பவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ் சாட்டியுள்ளார். யாழ் அரச அதிபரினால் கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக சிவாஜிலிங்கம் தனது காத்திரமான குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருக்கின்றார். அரசாங்க அதிபர் என்பவர் இலங்கைஅரசின் முகவராகவே மட்டும் இருக்க வேண்டுமேயன்றி உந்துகோலாக இருக்கக்கூடாது என சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். வன்னி அவலங்களை மூடி மறைக்கும் வகையிலேயே அரச அதிபரது அண்மைய உரை அமைந்துள்ளது.
வன்னியிலுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக இந்திய, இலங்கை அரசாங்கங்கள் முரண்பாடான தகவல்களை யுத்த நேரத்தில் வெளியிட்டிருந்தன. எண்பது ஆயிரம்பேர் சிக்குண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முல்லைத்தீவின் மேலதிக அரசாங்க அதிபர் மட்டும்
3 இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களைச் கொண்ட 70 ஆயிரம் குடும்பங்கள் வரை அப்பகுதியில் சிக்குண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அந்தவேளை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரோ மௌனம் காத்து வந்தார். அந்த மௌனத்தின் அர்த்தம் இப்போது புரிகின்றது. 70 ஆயிரம் மக்களுக்கு மட்டுமான உணவு விநியோகத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவே மௌனம் காத்திருந்தார் இமெல்டா சுகுமார் என்பது இப்போது
அம்பலமாகின்றது. இன்று எவ்வாறு அவர் மனச்சாட்சியின்றி பேசுகின்றார் என்பதன் முழு அர்த்தம் புரிகின்றது. 3 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் சிக்குண்டிருந்த நிலையில் 14 ஆயிரம் மக்கள் படுகாயமடைந்திருந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இயற்கைச் சீற்றத்தாலோ அல்லது இயற்கை மரணத்தாலோ உயிரிழந்திருக்கவில்லை. இவர்கள் அனைவரும் அப்பட்டமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலை செய்யப்பட்ட அனைவருமே வன்னி மக்கள். பாதிக்கப்பட்ட வன்னி மக்களுடனேயே நீண்டகாலம் வாழ்ந்த அரச அதிபர் இமெல்டா சுகுமாரால் எவ்வாறு உண்மைகளை மூடி மறைக்க முடிகின்றது என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்புகின்றார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுகின்ற குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவே இவர் முற்படுகின்றார். இனப்படுகொலை செய்பவர்களை விட அதனை மூடி மறைப்பவர்களையும் அதனை நியாயப்படுத்துபவர்களையும் வரலாறு மன்னிக்காது என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply