தேர்தல் நடைபெறும் சபைகளில் அதிகமானவற்றை கைப்பற்றுவோம்: சுசில்
நாட்டின் சில பகுதிகளில் 67 உள்ளூராட்சிமன்றங்களுக்கு ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறந்த முறையில் தயாராகிவருகின்றது. விரைவில் இது தொடர்பில் குறித்த பிரதேசங்களின் அமைப்பாளர்களுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளோம். தேர்தலில் நடைபெறவுள்ள சபைகளில் அதிகமானவற்றை நாங்கள் வெற்றிகொள்வோம் என்று ஆளும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
தேர்தலுக்கான கட்சிமட்ட ஆயத்தம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 67 சபைகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்த சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகிவிட்டது. நாங்கள் சிறந்த முறையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிகளவான சபைகளை வெற்றிகொள்வோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த பிரதேசங்களின் அமைப்பாளர்களுடன் சந்திப்பு ஒன்றை அடுத்தவாரம் நடத்தவுள்ளோம். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது ? கூட்டங்களை நடத்துவது போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படும்.
முக்கியமாக தேர்தல் நடைபெறும் உள்ளூராட்சிமன்ற பிரதேசங்களை அடிப்படையாகக்கொண்டே பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். மாபெரும் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. எவ்வாறெனினும் அடுத்தவாரம் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply