பிரித்தானியாவில் தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவர்

பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குவதற்காக தற்காலிக விசாக்களை துஷ்பிரயோகம் செய்து வரும் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறக் கோரப்படவுள்ளதாக பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டாமியன் கிறீன் தெரிவித்தார். கடந்த வருடம் பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளின் தற்காலிக தொகை என்றுமில்லாதவாறு அதிகரித்தமையை கருத்திற் கொண்டு எவரை பிரித்தானியாவில் தங்க அனுமதிப்பது என்பது தொடர்பில் தாம் மிகுந்த தெரிவை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

குடியேற்றவாசிகள் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவுகளுக்கு இடையில் தெளிவான வேறுபாட்டை பேணுவது அவசியம் என டாமியன் கிறீன் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையான 12 மாத காலப்பகுதியில் அதற்கு முன்னரான 12 மாத கலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பிரித்தானியாவுக்கான குடிவரவு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டு குடிவரவில் 1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற அதிகளவான அதிகரிப்பாகும். பிரித்தானியாவுக்கு தொழில் பெற்று வருவதற்கும் இங்கு நிரந்தரமாக தங்குவதற்குமிடையேயுள்ள தன்னிச்சையான இணைப்பை துண்டிக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்த டாமியன் கிறீன், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து பிரித்தானியாவுக்கு குறுகிய கால தகைமை, பற்றாக்குறையை நிரப்புவதற்கு வரும் தகைமையுள்ள பணியாளர்களின் ஆகக் கூடியது 5 வருடங்களில் பிரித்தானியாவை விட்டு வெளியேற எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

எதிர்காலத்தில் கடும் கட்டுப்பாட்டிற்கு அமைவாக மிகக் குறைந்தளவு குடியேற்றவாசிகளுக்கே பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேற்படி குடியேற்ற வாசிகளில் தங்கி வாழ்பவர்கள் பிரித்தானியாவில் குடியேற விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஆங்கில மொழி தகைமையை கொண்டிருக்க வேண்டும் எனக் கோரவும் பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இராஜதந்திர உத்தியோகத்தர்களது வீடுகளில் பணியாளர்களாக சேவையாற்றுவதற்காக பிரித்தானியாவுக்கு வரும் வீட்டுப் பணியாளர்களுக்கான தங்குவதங்கு அனுமதிக்கப்படும் காலம் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தனிப்பட்ட வீடுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விசாக்கள் இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பிரித்தானியாவிலுள்ள குடிவரவு சட்டவிதிகளின் பிரகாரம் வீட்டு பணியாளர்கள் 6 வருட காலத்திற்கும் மேலாக பிரித்தானியாவில் தங்கியிருக்கவும் அதன் பின் அங்கு குடியிருப்பதற்காக விண்ணப்பிக்கவும் முடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply