சீனா-ஆப்பிரிக்கா உறவு: கிளிண்டன் கவலை

ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனாவின் பொருளாதாரத் தொடர்புகள் அதிகரித்து வருவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார் கவலை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் சீனா கையாண்டுவரும் முதலீட்டுக் கொள்கை, ஆப்பிரிக்காவுக்கு சீனா நல்கிவரும் உதவித் திட்டங்கள் போன்றவை எல்லா நேரத்திலும் சர்வதேச விதிகளுக்கேற்ற வெளிப்படைத்தன்மை, நல்லாட்சித் தரங்கள் ஆகிவற்றை கொண்டிருப்பதில்லை என்று கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார்.

தவிர சீனா தனது வியாபார நலன்களை முன்னெடுக்கும்போது எல்லா நேரத்திலும் ஆப்பிரிக்க மக்களின் திறன்களை அதில் பயன்படுத்திக்கொள்வதில்லை என்றும் கிளிண்டன் அம்மையார் குறை கூறியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது ஐந்து நாள் பயணத்தின் துவக்கத்தில் ஸாம்பியாவில் கருத்து வெளியிட்ட கிளிண்டன் அம்மையார் தனது இந்த கவலைகளை முன்வைத்தார்.

ஆப்பிரிக்க ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் வரிவிலக்கு அந்தஸ்து வழங்குகின்ற ஒப்பந்தம் பற்றிய கருத்தரங்கின் பின்னர் கிளிண்டன் அம்மையார் பேசினார்.

அமெரிக்காவின் இந்த வரிவிலக்கை ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் ஒழுங்காகப் பயன்படுத்திக்கொள்வதில்லை என்று சுட்டிக்காட்டிய கிளிண்டன், இந்த வரிவிலக்கின் பலன்களை எல்லோரும் கூடுதலாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தவிர ஆப்பிரிக்க நாடுகள் தாம் கொண்டுள்ள வர்த்தகத் தடைகளை அகற்ற வேண்டும் என்றும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், தொழில்வாய்ப்புக்களை அதிலும் குறிப்பாக பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஆப்பிரிக்க நாடுகள் உருவாக்க வேண்டும் என்றும் கிளிண்டன் கேட்டுக்கொண்டார்.

ஆப்பிரிக்காவுடைய பொருளாதார வளர்ச்சியினால் அமெரிக்கா அடையக்கூடிய பலன்களில் சீனாவும் பங்குக்கு வருகிறது என்பதால், அமெரிக்கா கவலை அடைகிறது என்பதாக சீனா தொடர்பான கிளிண்டன் அம்மையாரின் வெளிப்படையான கருத்துகளை பார்க்கலாம்.

கடந்த பத்து வருடங்களில் மிக அதிகமான பொருளாதார வளர்ச்சி கண்ட உலகின் பத்து நாடுகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் ஆறு ஆப்பிரிக்க நாடுகள் ஆகும். தவிர சீனா ஆப்பிரிக்கா இடையிலான வர்த்தகமும் நாற்பது சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி கண்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் கிடைக்கும் மூலப் பொருட்களை சீனா தன்னுடைய பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டு, பிரதிபலனாக ஆப்பிரிக்காவில் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் தொலைதொடர்பு வசதிகளை அது முன்னேற்றிவருகிறது.

சீனாவுக்காக உணவு விளைவிப்பதற்கென ஏராளமான நிலங்களையும் சீனா வாங்கிவருகிறது.

ஆனால் ஆப்பிரிக்காவுக்கான சீனாவின் உதவித் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றுக்கு உரிய இடம் அளிப்பதில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply