பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பது என்பது தேவையற்ற நடவடிக்கை : TNA

இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் பல குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றின் அறிக்கைகளோ பரிந்துரைகளோ இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இதேபோல் நிபுணர்கள் குழு, சர்வகட்சி பிரதிநிதிகள் குழு என குழுக்கள் அமைக்கப்பட்டபோதிலும் அவற்றினால் கண்ட பலன் எதுவுமில்லை.
எனவே எதிர்காலத்திலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதென்பது தேவையற்ற நடவடிக்கையாகும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு கூட்டமைப்பு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சியாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது,

இனப்பிரச்சிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி இந்திய தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றக்காள்ள முடியாதென நாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம். மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்கவின் தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதனால் பயனெதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் தற்போதைய ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இதனைவிட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் தமது அறிக்கையினை சமர்ப்பித்துள்ளபோதிலும் அவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனைவிட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வுப்பொதி தயாரிக்கப்பட்டது. அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஜாதிக ஹெல உறுமய உட்பட பல கட்சிகள் அங்கம் வகித்திருந்தன. அந்த அறிக்கையும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. அதிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு மீண்டுமொரு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதென்பது காலத்தை வீணடிக்கும் முயற்சியாகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

இதுகுறித்து இந்திய உயர்மட்ட குழுவினரிடம் தெரியப்படுத்தியுள்ளோம். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் வடக்கில் இடம்பெற்று வரும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்கள் தொடர்பாகவும் நாம் எடுத்துக்கூறிய விடயங்களை இந்திய தூதுக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. எம்முடன் ஒத்துழைத்து செயற்படவும் குழு உறுதியளித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply