தேயிலைத் தோட்டங்கள் மூடப்படும் அபாயம்

தோட்டங்களை மூடும் அபாயம் உள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென பொருளாதார பிரதி அமைச்சரும் இ. தொ. கா. உப தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு இன்று 100 பெட்டி தேயிலை ஏற்றினால் அதில் 27 பெட்டிதான் நம்முடைய பெட்டிகளாக உள்ளன. ஏனையவை தனியார் துறையை சேர்ந்தவை. எனவே, இன்னும் ஒரு சில பெட்டிகள் தனியார் துறையில் அதிகரித்தால் நாம் வேண்டாதவர்களாக மாறிவிடுவோம். எனவே, இந்த சம்பள உயர்வானது நுவரெலியாவை தவிர்ந்த பல தோட்டங்களை மூட வழி வகுக்கும். அதனால், தோட்டத் தொழிலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தோட்டங்கள் மூடினால் நாம் எங்கு செல்வது சம்பள அதிகரிப்பை கோரும் அதேவேளை தோட்டங்களையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட மஸ்கெலியா ராஜமலைக்கு ஒரு கோடி ரூபா செலவில் கொங்கிaட் வீதியும், 85 இலட்சம் ரூபா செலவில் மின்சாரம் வழங்கும் நிகழ்வு புதன் மாலை 2.30 மணி அளவில் ராஜமலை தோட்டத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விரண்டு திட்டங்கள் மூலம் முள்ளுகாமம் தோட்டத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களும் புதுகாடு தோட்டத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களும், எடஸ் தோட்டத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களும் வலதல தோட்டத்தைச் சேர்ந்த 600 குடும்பங்களும் ராஜமலை தோட்டத்தைச் சேர்ந்த 60 குடும்பங்களும் நன்மையடைய உள்ளன என்றும் அவர் கூறினார்.

பிரதி அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; இன்று உயர்த்தப்பட்ட சம்பள உயர்வின் மூலம் அடிப்படை சம்பளம் 380 ரூபாவும் மேலதிக கிலோவுக்காக 17 ரூபாவும் மொத்தம் 530 ரூபா கிடைக்கின்றது. 1970 பகுதிகளில் வேலைக்கு வந்த ஒருவருக்கு கிடைத்த 70 ரூபா 5400 ரூபாவாக உயர்ந்துள்ளது. இது சும்மா கிடைக்கவில்லை. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தீர்க்கதரிசமான செயற்பாட்டால் தான் கிடைத்துள்ளது. முதலாளிமார் 285 ரூபாவிலிருந்து 310 ரூபா வரை தான் தருவதாக தெரிவித்தனர். ஆனால், அமைச்சரின் விடாபிடியால் தான் 380 ரூபா கிடைத்தது. இன்று ஒரு சிலர் வீதியில் இறங்கி பத்து வருடமாக போராடுகிறார்கள். ஆனால், 10 சதம் கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு வாங்கிக் கொடுக்கவில்லை. கடந்த வருட சம்பள உயர்வின்போது சம்பள உயர்வை அதிகரித்துத் தருவதாக சந்திரசேகரன் கூறிய போது, நாங்கள் சற்று ஒதுங்கியிருந்தோம். பின் மன்னித்து சம்பள உயர்வை உயர்த்தித் தருமாறு சந்திரசேசகரன் கடிதம் எழுதியிருந்தார். அதன் பின் தான் நாம் மீண்டும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தோம்.

கொழும்பிலிருந்து எட்டுப் பேரை வைத்துக்கொண்டு தொழிற் சங்கம் அமைக்கிறார்கள். அவர்களால் செய்யக்கூடியது ஒன்றும் கிடையாது. இன்று சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இ. தொ. கா வில் இருப்பதால் தான் கோடிக்கணக்கான அபிவிருத்தி வேலைகளை தோட்டங்களுக்கு செய்யக்கூடியதாக உள்ளது.

எனவே இ. தொ. காவையும் அதன் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானையும் பலப்படுத்த வேண்டியது எமது கடமை. அவர்தான் இன்று மலையகத்துக்குள்ள ஒரே தலைவன். இதனை உணர்ந்து செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ராம், ரமேஸ், ஜனாதிபதி ஆலோசகரும் இ. தொ.கா உபதலைவருமான ஜெகதீஸ்வரன், அம்பகமுவ பிரதேச சபைத் தலைவர் தினேஸ், முன்னாள் தலைவரும் உறுப்பினருமான நகுலேஸ்வரன் உட்பட இ. தொ. கா முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply