யாழ் சம்வம் குறித்து யாழ் கட்டளையதிகாரி கவலை
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவத்தின் யாழ் கட்டளையதிகாரி கவலை தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரோடு நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ் மாவட்ட கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, இத்தகைய சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், பின்னர் உள்ளுர் செய்தியாளர்களையும் சந்தித்து அளவெட்டி சம்பவம் தொடர்பாகத் தமது கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற அமைதியான சூழலைக் குழப்புவதற்கான நடவடிக்கைகளில் தீய சக்திகள் செயற்பட்டு வருவதாகவும், அத்தகைய சக்தியினால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரும், பொலிசாரும் வெவ்வேறாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும், விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
தீய சக்திகள்
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்ற தீய சக்திகளில் இராணுவத்தினரோ அல்லது வெளியாட்களோ இருக்கலாம் என்றும், சிலவேளைகளில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் விடுதலையாகியுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளும் இருக்கலாம் என்றும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் இராணுவத்தில் இருந்து விலக்கப்படுவார்கள் எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க செய்தியளார்களிடம் கூறியிருக்கின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply