இனப்பிரச்சினை தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் அரசின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்தது. அது பற்றிக் கூட்டமைப்பு ஒரு போதும் கண்டுகொள்ளாது என்றும் அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் கட்சியின் இணைச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவும் இந்தத் தெரிவுக்குழு யோசனை தொடர்பில் திருப்தியாக இல்லை என்றும் தெரியவருகிறது. கடந்த 10ஆம் திகதி கொழும்பு வந்திருந்தது இந்திய மூவரணி. இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ், பாதுகாப்பு அமைச்சின் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர். மூவரணியைச் சந்தித்த ஜனாதிபதி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்காகக் கொண்டு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தான் அமைக்க உத்தேசிக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த போது, தெரிவுக் குழுவை அமைப்பது குறித்து ஆராய்ந்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களே நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை அப்போது முன்வைத்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வாரத்தில் தெரிவுக் குழு அமைக்கப்படலாம் என்று அரச தரப்புச் செய்திகள் கூறுகின்றன. இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் மீண்டும் ஒரு தெரிவுக் குழுவை அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு உடன்பாடுகள் இல்லை என்று எமது அரசியல் வட்டாரங்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன.
இனப்பிரச்சினை இலங்கையின் உள்விவகாரம் என்பதால், அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் கொழும்பு அரசே முடிவு செய்ய வேண்டும் என்று இந்தியா வெளிப்படையாகச் சொல்லி வந்தாலும் தெரிவுக் குழு, அனைத்துக் கட்சிக் குழு போன்றவற்றை அமைத்து காலத்தை மஹிந்த வீணடிப்பதை புதுடில்லி விரும்பவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஆணித்தரமாக எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். சந்திரிகா காலத்தில் மங்களமுனசிங்க குழு, தீர்வுப் பொதி என்பனவும் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அனைத்துக் கட்சிக் குழுவும் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் தத்தமது தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளன. ஆனால் அவற்றால் என்ன நடந்தது?
இறுதியில் அனைத்துக் கட்சிக் குழு ஒரு தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. அதில் என்னென்ன விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன என்பதும் எமக்குத் தெரியும். ஆனால் இன்றைய அரசு அதனைப் பேச்சு மேசையில் வைத்து தீர்வை நோக்கி நகர்வதற்குத் தயாராக இல்லை.
அதுபோன்றே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவும் இருக்கப் போகிறது. எனவே அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை அடியோடு நிராகரிக்கும். அனைத்துக் கட்சிக் குழுவில் நாம் எப்படி இறுதிவரை பங்கேற்கவில்லையோ அதுபோலவே இதிலும் பங்கெடுத்துக்கொள்ள மாட்டோம் என்றார் அவர்.
தெரிவுக்குழுவை இந்தியாவும் எதிர்க்கும் நிலையில் இலங்கையில் அதனை எதிர்க்கும் சக்திகளுக்குப் புதுடில்லியின் ஆதரவு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்று கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply