வடக்கிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் : மாவை

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக வடக்கு, தெற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். சிவில் நிர்வாகத்துக்கு இடமளித்து வடக்கிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார். அளவெட்டியில் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது குற்றுயிராக இருந்த ஜனநாயகத்துக்கு இறுதியாக அடிக்கப்பட்ட சாவுமணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அளவெட்டிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம். சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஜனநாயக மக்கள் முனனணியின் தøலவர் மனோ கணேசன், செயலாளர் நல்லையா குமரகுருபரன், உப தலைவர் வேலணை வேணியன் உட்பட பல அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

12.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 1.15 மணிவரை நடைபெற்றது. இதன்போது இராணுவச் சட்டம் இலங்கைக்கு வேண்டாம், சிவில்நிர்வாகத்தை வடக்கில் உறுதிசெய்க, யாழ். கட்டளைத் தளபதி பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியபடியும் சுலோக அட்டைகளை தாங்கியவாறும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனநாயக ரீதியில் வேட்பாளர் சந்திப்பொன்றை கடந்தவாரத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர். இதில் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த அமைதியான சந்திப்பில் இராணுவ சீருடையுடன் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மெய்ப்பாதுகாப்பாளர்கள் இந்தக் தாக்குதலிலிருந்து எம்.பி.க்களைப் பாதுகாத்தனர். இதன்போது அவர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இங்கிருந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொல்லுகளுடன், துப்பாக்கிகளுடனும் வந்தே தாக்குதலை மேற்கொண்டனர். ஜனநாயக ரீதியில் நடைபெறும் இவ்வாறான கூட்டங்களில் இராணுவத்தினர் தலையிடவேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பினரின் அரசியலை முடக்கி வடக்கு மக்களை அச்சத்துக்குள் வைத்திருக்கவே இத்தகைய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. எனவே ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக தெற்கில் சிங்க மக்களும் வடக்கின் தமிழ்மக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டிய காலம் பிறந்துள்ளது என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply