உண்மையான தீர்வுத் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை: ஜே.வி.பி குற்றச்சாட்டு
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிப்பதாக அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சு வார்த்தையில் உறுதியளித்துள்ள போதிலும் அரசிடம் உண்மையான தீர்வுத் திட்டம் எதுவுமே கிடையாது. இந்தியாவையும் அமெரிக்காவையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம் தமிழ் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் பல உறுதி மொழிகளை வழங்கிய போதும் அவற்றை நிறைவேற்றவே இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் தேவையற்றவையாகும் என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.
ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் இது வரையில் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கி வந்துள்ளது. ஆனாலும் எதனையும் நிறைவேற்றியதாக இல்லை.
தீர்வு காண்பதற்காக 13ஆவது திருத்தத்தை அதிகரித்து (13+) வழங்கப்போவதாக அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அரசு உறுதியளித்தது. அந்த உறுதி மொழிகள் தற்போது காணாமல் போயுள்ளன. அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது செய்தியாளர் மாநாட்டின் போது தமிழர் விவகாரத்துக்கு தீர்வு காணும் முகமாக 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் செல்வதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஆனால் இரண்டு தினங்களின் பின்னர் ஜனாதிபதி மேற்படி திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க அரசு தாயரில்லை என்று தெளிவாக அறிவித்திருந்தார்.
அப்படியானால் இதில் எது உண்மையானது அமைச்சர்கள் ஒருவிதமாகவும் ஜனாதிபதி வேறு விதமாகவும் கூறுவது பரஸ்பர விரோத கருத்துக்களாகும். தமிழ் மக்களுக்கு தீர்வு என்று கூறி சர்வாதிகார பாணியில் தீர்வுகளை வழங்க முடியாது.
மேலும் இதுவரைகாலமும் இந்த பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் அவர்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் என சர்வதேச குழுவோ அல்லது பாராளுமன்ற தெரிவுக் குழுவோ இப்போது அவசியம் கிடையாது.
அவ்வாறான குழுக்களை ஜே.வி.பி நிராகரிக்கின்றது. கடந்த காலங்களில் தேர்தல்களை வெற்றி கொள்வதற்காக அரசாங்கம் தமிழர் விடயம் தொடர்பாக பல்வேறு கதைகளையும் கூறி தீர்வையும் தருவதாக அரசு கூறியது. அதேபோல் தேர்தல் நிறைவடைந்ததும் அரச தரப்பினரால் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இது வரையில் நிறை வேற்றப்படவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி அரசியல் தீர்வு தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கவிருப்பதாக கூறியிருப்பதில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் முன்வைப்பதற்கான உண்மையான தீர்வு அரசாங்கத்திடம் இல்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply