தெரிவுக்குழு எடுக்கும் தீர்மானமே இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு ஊடக முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முழுப்பொறுப்பும் விரைவில் நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்தக் குழு எடுக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தை வலுப்படுத்துவதுடன் ஜனநாயகத்தையும் தழைத்தோங்கச் செய்யும்.
‘அதேநேரம் பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் தீர்மானமே இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வாகவும் அமையும். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அலரிமாளிகையில் தனியார் மற்றும் அரசாங்க பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பாளர்களையும் சந்தித்த போது தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு வொன்றை தாம் பல தடவைகள் சந்தித்து இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆலோசனைகளை நடத்தி இருப்பதாகவும் இதன் 8வது கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்றும், தலைவர் ஒன்றைக்கூறும் போது செயலாளர் இன்னுமொரு கருத்தை தெரிவிக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.
நாம் சகல தமிழ் கட்சிகளுடனும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி கருத்துக்களை பரிமாறிய பின்னர் அதனை பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் கூடி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க முடியுமென்று ஜனாதிபதி தெரி வித்தார்.
அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவின் அறிக்கை உட்பட பல அறிக்கைகள் இன்று மூலையில் முடக்கி வைக்கப் பட்டிருக்கிறதென்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், நாம் கடந்த காலத்தில் விட்ட சிறு பிழைகளை தவிர்த்துக் கொண்டு, பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சித் தலைவர்கள், கட்சி அங்கத்தவர்களை ஒன்றிணைக்கும் தெரிவுக்குழு ஊடாக இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் கூறினார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை காலதாமதப் படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்திருக்கிறதென்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள்; பாராளுமன்ற தெரிவுக்குழு இது விடயத்தில் துரிதமாக செயற்படுவது அவசியமாகும். அதனால் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதென்றும், இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஒரு மாதத்தில் வந்தாலோ அல்லது ஆறு மாதத்தில் வந்தாலோ அதனை தாம் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சகல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை அளித்து, அவ்வறிக்கையை கூடிய விரைவில் வெளிவருவதற்கு அனைவரும் உறுதுணை புரிய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
தகவல் அறியும் உரிமையில் கட்டுப்பாடு இல்லை
தகவல் அறியும் உரிமை இலங்கைப் பிரஜைகள் அனைவருக்கும் முழுமையாக இருந்து வருகின்றது. இதற்கு அரசாங்கம் எவ்வித கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க தயங்கியதற்கு காரணமென்ன என்று வினவினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஊடகவியலாளர்களுக்கு எனக்கு தெரியாத விடயங்களை கூட தெரிந்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது என்று சுட்டிக்காட்டி, உங்களுக்கு ஏதாவது தகவல்களை அறிய விரும்பினால் என்னுடன் நடைபெறும் சந்திப்பில் உங்களுடைய கேள்விகளை கொடுத்தால் அதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தக்க பதிலைப் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறினார்.
உத்தியோகபூர்வ இரகசிய தகவல்கள் சட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள விடயங்களைத் தவிர்ந்த சகல தகவல்களையும் அறிய இந்நாட்டு பிரஜைகளுக்கு பூரண உரிமையிருக்கிறதென்றும் ஜனாதிபதி கூறினார்.
“நான் முன்பொரு தடவை கடற்றொழில் அமைச்சராக இருந்த போது எனது அமைச்சு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக முன்வைத்த ஒரு தகவல் அமைச்சரவைக்கு செல்வதற்கு முன்னரே ஒரு கொந்தராத்துக்காரரின் கையில் இருந்ததை நான் கண்டுபிடித்தேன். இதுவிடயத்தில் எனக்கு அனுபவ அறிவு இருக்கிறது” என்று ஜனாதிபதி கூறினார்.
மகாநாம திலகரட்ண கட்டுநாயக்க கலவரம் பற்றி உங்களுக்கு கையளித்த அறிக்கை சம்பந்தமாக நீங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லையே என்று அங்கு ஒரு கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, எனக்கு தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே திலகரட்ணவை நியமித்து விசாரணை நடத்தினேன்” என்றார். “இதுவும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் அதுபற்றி தகவல்களை ஒரு சட்டத்தரணி என்ற முறையில் நான் வெளியிட விரும்பவில்லை என்று கூறினார். நீங்கள் விரும்பினால் அதனை சரத் என். சில்வாவிடம் கேட்டறிந்து கொள்ளலாம்” என்றும் ஜனாதிபதி கூறினார்.
கொழும்பு பஸ் என்ற பெயரில் ஒரு இணையத்தளம் இப்போது பஸ்களில் நடக்கும் சில முறையற்ற சம்பவங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இது சமூகத்திற்கு பொருத்தமற்ற தகவல்களை வெளியிடுகிறதென்று தெரிந்தும் கூட அதனை தணிக்கை செய்தால் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அபகரித்து விட்டதென்று எல்லோரும் கூச்சல் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால் தான் உதாசீனப்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அரிசியில் நஞ்சு இல்லை அவர் மேலும் கூறியதாவது;
நான் நாளாந்தம் சோற்றையே விரும்பி உண்கிறேன். குறிப்பாக சிவப்பு அரிசியையே சாப்பிடுகிறேன். அரிசியில் எந்தவித நச்சுத்தன்மையும் இல்லை என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது.
அரசாங்க அமைப்பொன்றுக்கு ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக டாக்டர் முபாரக் தலைவராக இருக்கிறார். அவர் எங்கள் அரிசியில் நச்சுத் தன்மை இல்லையென்று ஆதாரபூர்வமாக கூறுகிறார். ஆயினும் இன்னுமொரு தரப்பினர் அரிசியில் நச்சுத்தன்மை இருக்கிறதென்று வாதாடுகிறார்கள். எனவே, இது குறித்து நாம் தக்க விசாரணைகளை நடத்தி உண்மை எது என்பதை கண்டறிவது அவசியமாகும். வடமத்திய மாகாணத்தில் மாத்திரம் உற்பத்தியாகும் அரிசியில் இந்த நச்சுத் தன்மை இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, இந்த சர்ச்சைக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறிவது அவசியமென அவர் தெரிவித்தார்.
இதே வேளை, பயிர்களுக்கு அடிக்கும் சில வகை கிருமிநாசனிகளுக்கு ஏற்கனவே தடைவிதித்திருப்பதாகவும் அரிசியில் எவ்விதமான நச்சுத்தன்மை இல்லையென்றும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கூறினார்.
ஹம்பாந்தோட்டை விளையாட்டு நகரம்
ஹம்பாந்தோட்டையை ஒரு விளையாட்டு நகரமாக அமைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிட்டு வருகின்றது. இதற்கு தனியார் துறையினர் ஹோட்டல்களையும், ஏனைய வசதிகளையும் நிர்மாணிப்பதற்காக பெருந்தொகை பணத்தையும் இப்போது முதலீடு செய்துள்ளார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஹம்பந்தோட்டைக்கு ஏன் இவ்வளவு பணத்தை செலவிடுகிaர்கள் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வீதிகளை அமைத்தல், விளையாட்டு அரங்குகளை அமைத்தல், நீச்சல் தடாகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
அதற்கு தனியார் துறையின் மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply