வடக்கில் அரசியல் சுதந்திரம் இல்லை: கபே தெரிவிக்கிறது

வடக்கில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்தமாதம் நடைபெறவிருக்கின்ற நிலையில் அங்கு அரசியல் சுதந்திரமற்ற நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. இதனால் எதிரணியினர் அச்சம், பயமின்றி சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று கபே தெரிவித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற தேர்தல் பிரசாரம் தொடர்பிலும் கபே அமைப்பின் கண்காணிப்பு செயற்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவிக்கையிலேயே கபே அமைப்பின் தேசிய இணைப்பாளர் கீர்த்தி தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமன்றி உள்ளக கூட்டங்களை கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருகின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினரால் நடத்தப்பட்ட உள்ளக கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியினால் கிளிநொச்சியின் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இவையாவும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாகும்.

எதிரணியினால் சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கமுடியாத நிலையில் தீவுகளுக்கும் செல்லமுடியாத நிலைமையே அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவையாவும் அங்கு அரசியல் சுதந்திரமற்ற நிலைமையே எடுத்தியம்புகின்றது.

எனினும் அரசாங்கமும் அரசாங்கத்தை சார்ந்த இதர தரப்பினரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். எதிரணியினருக்கு இடமளிக்காமல் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாகும்.

வடக்கில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் கபே அமைப்பின் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் அண்மிக்கும் காலத்தில் சுமார் 80 குழுக்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply