இலங்கையிலும் சிகரட் பெட்டிகளில் புகைப்பிடித்தல் அபாயத்தை சித்தரிக்கும் படங்கள்

புகைப்பிடித்தலால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சித்தரிக்கக் கூடிய காட்சிகளை புகைப்பிடிக்கும் பொருட்களின் பக்கட்டுகளில் பிரசுரிப்பதைக் கட்டாயப்படுத்தும் ஒழுங்கு விதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார். புகையிலைப் பாவனையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக உழைத்துவரும் இலங்கை ஜீவக்கமன்றம் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் ஜீவக்க மன்றத்தின் தலைவி மஞ்சரி பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் கார்லோ பொன்சேகா மேலும் கூறுகையில்:- புகையிலை பாவனையைக் கட்டுப்படுத்து வது தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் ஆசியக் கண்டத்தில் கையெழுத்திட்ட முதலாவது நாடு இலங்கையாகும்.

இப்பிரகடனத்தில் 2005ம் ஆண்டில் தான் இந்நாடு கைச்சாத்திட்டது. இதற்கேற்ப 2006ம் ஆண்டில் 27ம் இலக்கச் சட்டத்தின் கீழ் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. இதனூடாகப் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் புகையிலைப் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சித்தரிக்கக் கூடிய காட்சிகளை புகைப்பிடிக்கும் பொருட்களைக் கொண்ட பக்கட்டுகளில் பிரசுரிக்கும் முறை இற்றைவரையும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

ஆனால் புகையிலை தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதால் புகைப்பிடித்தல் பாதிப்பு காட்சிகளை புகைப்பிடிக்கும் பொருட்களைக் கொண்ட பக்கட்டுகளில் பிரசுரிப்பது மிக அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டு புகைப்பிடித்தலால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சித்தரிக்கக் கூடிய காட்சிகளை புகைப்பிடிக்கும் பொருட்களைக் கொண்ட பக்கட்டுக்களில் பிரசுரிப்பதைக் கட்டாயப்படுத்தும் ஒழுங்குவிதி விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபைச்சட்டத்தின் கீழ் இந்த ஒழுங்கு விதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும். தற்போது இது தொடர்பான வரைவு சட்ட வரைஞர் திணைக்களத்தின் பரிசீலனையில் உள்ளது.

புகையிலைப் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சித்திரிக்கும் காட்சிகளை புகைப்பிடிக்கும் பொருட்களை உள்ளடக்கிய பக்கட்டுகளில் பல நாடுகளில் பிரசுரிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அந்நாடுகளில் புகைபிடித்தல் பாவனையும் பெரிதும் குறைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் 2600வது சம்புத்தத்துவ ஜயந்தி மற்றும் மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டங்களின் கீழ் புகைப்பிடிக்கும் பொருட்களைக் கொண்ட பக்கட்டுகளில் அவற்றின் பாதிப்புக்களை சித்திரிக்கும் காட்சிகளை கட்டாயப்படுத்தும் ஒழுங்கு விதி விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றார். இச் செய்தியாளர் மாநாட்டில் மகரகம புற்றுநோய் ஆஸ்பத்திரியின் மருத்துவ நிபுணர் சமாதி ராஜபக்ஷவும் உரையாற்றினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply