அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்தினை சிறிரெலோ கட்சி வன்மையாகக்கண்டிக்கிறது
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக அரசு எந்த கட்சியையும் ஏற்காததாலேயே அரசியல் தீர்வை தாயரிப்பதற்கு நாடாளுமன்ற குழுவை அமைக்கிறது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்தினை சிறிரெலோ கட்சி வன்மையாகக்கண்டிக்கிறது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் யார் என்பதனை தீர்மானிப்பது தமிழ் மக்களே தவிர பேரினவாத சக்திகளோ அல்லது அவர்களோடு சேர்ந்தியங்கும் அருவருடிகளோ அல்ல என்பதனை அமைச்சர் அவர்களும் அரசாங்கமும் புரிந்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதனை தமிழ் மக்களின் நலன் பேணும் கட்சி என்ற வகையில் சிறிரெலோ கட்சி இந்த தருணத்தில் சுட்டிக்காட்டவிரும்புகிறது.
கடந்த 3 தசாப்த காலமாக எமது மண்ணில் இடம்பெற்ற கொடுர யுத்தத்தினால் எமது சமுகமானது கல்வி,கலை கலாச்சாரம் போன்றவற்றினை இழந்து நாதியற்று நடுவீதியில் நிற்கின்ற இந்த தருணத்தில் எம்மக்களிற்கு இருக்கின்ற ஒரே ஒரு உரிமை வாக்களித்து தமது பிரதிநிதிகள் யார் என்பதனை தெரிவு செய்வதாகும். ஆனால் அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கின்ற கருத்தின் மூலம் அந்த உரிமையும் பறிக்கப்பட்டிருப்பதாகவே கருதவேண்டியிருக்கின்றது.
மக்கள் வாக்களித்து பல கட்சிகளில் பலரை தெரிவு செய்திருக்கலாம் ஆனால் மக்கள் தமது வாக்குகளை அதிகப்படியாக எந்த கட்சிக்கு வாக்களித்து அதிக பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்றார்களோ அவர்களே அம்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பது உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் ஒருமித்த கருத்தாகும்.
இது இவ்வாறு இருக்கையில் அரசாங்கமானது அரசியல் தீர்வை தயாரிப்பதற்கு திடிர் என தெரிவுக்குழுவை அமைக்க முற்படுகின்ற செயற்பாட்டின் பின்னனியில் அரசோடு சேர்ந்தியங்கும் சுயலாப அரசியல்வாதிகளின் கருத்தும் உள்வாங்கப்பட்டிருக்கலாம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றன.
மக்கள் இவ்வாறு விசனமடைவதனால் ஆளும்கட்சி மீது எம்மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பு குறைவடைவதுடன் இடம்பெறவுள்ள தேர்தலில் கிடைக்கவிருக்கின்ற வாக்குகளையும் அரசு இழக்க வாய்ப்பிருக்கிறது என்பதனையும் நாம் அரசிற்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பதனைவிடுத்து தமிழ் மக்களிற்கு உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்க வடக்கு கிழக்கில் உள்ள சகல தமிழ் கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒருகுழுவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் தமிழ்மக்களிற்கான தீர்வினை தமிழ் தலைமைகளிடம் இருந்தே அறிந்துகொள்ளமுடியும் என்பதனையும் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகான முனைகின்ற அனைத்து தரப்பினர்க்கும் இந்த தருணத்தில் தமிழ் மக்களின் நலம் பேணும் கட்சி என்ற வகையில் சிறிரெலோ கட்சி எடுத்துக்கூற விரும்புகின்றது.
ஊடகச்செயலாளர் சிறிரெலோ
எஸ்.செந்தூரன்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply