பொருளாதாரத்தை சீரழிப்போரிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்வது அவசியம் : ஜனாதிபதி

அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியவர்களாலேயே கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். மக்கள் வங்கியை வங்குரோத்து நிலை அரச நிறுவனமாக்கி அவற்றை மூடிவிடுவதற்குத் திட்டமிட்டவர்களும் அவர்களே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மக்கள் வங்கியின் 50வது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா தேசிய நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ஜீவன் குமாரதுங்க, பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் ரி. பி. இலங்கரட்ண, பிலிப் குணவர்தன ஆகியோரின் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டின் மூலமே மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது என்பதை நினைவுகூர விரும்புகிறேன்.

வங்குரோத்து நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த நிறுவனமாக மக்கள் வங்கியை மாற்றியே 50 வருட நிறைவு இன்று நினைவுகூரப்படுகிறது. எதிர்வரும் 50 வருடங்களில் மக்களின் தேவை உணர்ந்து எதிர்காலத்துக்குப் பொருத்தமான சிறந்த சேவையை வழங்குவதற்கு மக்கள் வங்கி திடசங்கற்பம் பூணுவது அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 50 வருடங்களில் மக்கள் வங்கி பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகளை நினைவுகூரும் இத்தருணத்தில் எதிர்காலத்தில் தேசிய பொருளாதாரத்துக்கு அதனூடான பங்களிப்புப் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது.

பொருளாதாரத்தை அழிப்பவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் நீண்டபயணம் செல்லவேண்டியுள்ளது. அவர்கள் தினமும் முழு நாட்டையும் விற்றுத் தின்பதற்கு பார்த்துக்கொண்டிருக் கின்றனர். இன்றோ நாளையோ நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிடுமென்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உலகப் பொருளாதாரம் சீர்குலைந்து வங்கித் துறை வீழ்ச்சியுற்று தொழிலின்றி வீழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் நாம் எமது வங்கித்துறையை இந்தளவுக்குக் கட்டியெழுப்பியுள்ளமை எமது பெரும் பலமாக அமைந்துள்ளது. எதிர்வரும் 50 வருட காலத்தில் மக்களோடு நெருங்கிய தொடர்புள்ள வங்கியாக மக்கள் வங்கியைக் கட்டியெழுப்புவதற்கு அதன் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் 50வது நிறைவையொட்டி இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆயிரம் ரூபா பெறுமதியான விசேட நாணயக் குற்றி மற்றும் ஒருநாள் தபால் தலை என்பனவும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் மக்கள் வங்கியின் 686 கிளைகளிலும் நேற்றையதினம் 50வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply