ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம்: கடாபி எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகள் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்று லிபியா அதிபர் கடாபி எச்சரித்து இருக்கிறார். லிபியாவில் 41 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்து வரும் கடாபி பதவி விலகக்கோரி அந்த நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. கடாபி எதிர்ப்பாளர்கள் தெற்கு பகுதியில் உள்ள பெங்காசி, மிஸ்ராட்டா ஆகிய நகரங்களை கைப்பற்றி உள்ளனர். அந்த நகரங்கள் மீது கடாபி ஆதரவு ராணுவம் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பல அப்பாவிகள் பலியாகி உள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ ராணுவம் கடாபி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக திரிபோலி நகரின் மீது விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கடாபியின் மகன் மற்றும் பேரக்குழந்தைகள் பலியாகி உள்ளனர். பல வீடுகள், அரசுக்கட்டிடங்கள் இடிந்து குட்டிச்சுவர்களாக உள்ளன.
இந்த நிலையில் திரிபோலி நகரில் உள்ள நிரீன் சதுக்கத்தில் திரண்ட தன் ஆதரவாளர்கள் மத்தியில் கடாபி தொலைபேசி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐரோப்பிய நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. எங்களாலும் அவர்கள் மீது போர் தொடுக்க முடியும். எங்கள் வீடுகளை தகர்த்தது போன்று அவர்களது வீடுகள், அலுவலகங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முடியும்.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். போரை முடிவுக்கு கொண்டுவரவும் தீர்மானித்து இருக்கிறோம். ஆனால் அதற்கு அவர்கள் தயாராக இல்லை என கடாபி தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தை அவரது மகன்களும் எதிரொலித்தனர். அவர்கள் தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில், யாரும் சமாதானத்துக்கு வராத நிலையில் எங்கள் தந்தையின் ஆதரவாளர்களும் போரை நிறுத்த தயாராகவில்லை என்று குறிப்பிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply