அரசு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுமானால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும் : மாவை
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு மறுக்குமானால் அல்லது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுமானால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஆதரவை வழங்கும் என்ற முழு நம்பிக்கையும் எமக்கு உண்டு எனவும் அவர் கூறியுள்ளார். ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் நிலங்கள் எழுந்தமானமாக ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்களும் இராணுவ குடியிருப்புகளும் ஆங்காங்கே அமைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்த பிரதேசம், விவசாயம் செய்து வந்த நிலங்கள் இன்று சிங்கள மீனவர்களினதும் சிங்கள விவசாயிகளினதும் தொழில் செய்யும் இடங்களாக மாறி வருகின்றன.
புத்தர் சிலைகளும் சின்னங்களும் இந்து கிறிஸ்தவ மக்கள் வாழும் தமிழ்ப் பிரதேசங்களில் எழுந்தமானமாக நிறுவப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவ சிங்கள மயமாக்கப்பட்டு வருவது மட்டுமல்ல தமிழர்களின் மொழி மத கலாசாரங்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தொடர்ச்சியான நிலப்பரப்புகள் இக் காரணங்களால் துண்டாடப்படுகின்றன. தமிழ் மக்கள் செறிந்து பெரும்பான்மை பலத்துடன் வாழுகின்ற இடங்கள் இத்தகைய நடவடிக்கையினால் அவர்கள் தமது சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
இத்தகைய செயல்கள் தமிழர்களது அரசியல் வேட்கையை அபிலாஷைகளை மழுங்கடித்தும் சீரழிக்கும் செயல்களாக அமைகின்றன. தனித்தமிழ் பிரதேசங்களை கலப்பினப் பிரதேசங்களாக மாற்றியமைப்பதே அரசின் இந்த சூழ்ச்சித் திட்டமாகும். இதை நாம் விரைந்து தடுத்து நிறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply