புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 552 பேர் இன்று சமூகத்தில் இணைவு
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் மேலும் 552 பேர் இன்று சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இன்றையதினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வைபவத்தில் இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இதுவரை 7 ஆயிரத்து 500ற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரிகேடியர், புனர்வாழ்வு பெற்றுவரும் சுமார் 2 ஆயிரத்து தொள்ளாயிரம் பேர் கூடிய விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சி பெற்ற 552 பேர் இன்றையதினம் சமூகத்துடன் இணைக்கப்படவிருப்பதுடன், இம்மாதத்தில் மேலும் ஒரு தொகுதியினரை சமூகத்தில் இணைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
அதேநேரம், அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சியவர்களை இவ்வருட இறுதிக்குள் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 552 பேரை விடுதலை செய்யும் நிகழ்வில் அமைச்சர் கஜதீர, அமைச்சின் செயலாளர் எஸ். திசாநாயக்க. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply