இலங்கையின் வடக்கே வெளிநாட்டவர்கள் பயணிப்பதற்கு முன் அனுமதி தேவை இல்லை
இலங்கையின் வடக்கே வெளிநாட்டவர்கள் பயணிப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகளை இன்று திங்கட் கிழமை முதல் தளர்த்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடக்கே பயணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியைப் பெற்ற பின்னரே அங்கு செல்ல முடியும் என்று முன்னர் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் இயக்குநர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பு கருதியே, இந்த தடைகள் முன்னர் இருந்ததாக கூறுகின்ற இலங்கை அரசு சார்பில் பேசவல்ல அதிகாரி, தற்போது வடக்கில் அமைதி முற்று முழுதாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் இனி இந்த கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை என்று கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி
சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் வடக்கு பயணிக்க முன்னர் இருந்த தடைகளும் தளர்த்தப் பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. வடக்கே, யாழ்ப்பாணம் தவிர, ஏ9 வீதிக்கு வெளியே வன்னியின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் எவரும் பயணிக்க முடியுமா என்று கேட்டதற்கு பதிலளித்த, ஹுலுகல்ல, ஏனைய பகுதிகளுக்கு பயணிப்பதைப் போல எவரும் நாட்டின் எந்த இடத்துக்கும் பயணிப்பதில் இனி எந்த தடையும் இருக்காது என்று கூறினார்.
ஆனால், வன்னியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாதுள்ள சில கிராமங்களில் மட்டும் பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் இயக்குநர் கூறினார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள்
அரச சார்பற்ற நிறுவனங்களும் வடக்கில் எந்த இடத்துக்கும் சென்று வர எவ்வித தடையும் இல்லை என்கின்ற போதிலும், அந்த நிறுவனங்கள் அங்கு தமது பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் ஜனாதிபதி பணியகத்தின் சிறப்பு நிகழ்ச்சித் திட்டம் ஊடாகவே அவற்றை மேற்கொள்ள முடியும் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply