உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து TNA நாளை தீர்மானிக்கும்
அரசியல் தீர்வு யோசனையைத் தயாரிப்பதற்கான உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதா, இல்லையா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் கூடி தீர்மானிக்கும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சிகளின் அதிருப்திக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இனப் பிரச்சி னைக்கான தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான பிரேரணை இன்று கூடவுள்ள நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்துக்கு எதிரணியினர் தமது நிலைப்பாட்டை உத்தி யோகபூர்வமாகத் தெரிவிக்க வில்லை எனவும், அதனால், நாடாளுமன்றில் இது தொடர்பான நிலைப்பாடுகளை கட்சிகள் அறிவிக்க வேண்டும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் விடயம் தொடர்பிலான இறுதி முடிவு நாளை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசின் யோசனைக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. அத்துடன் தெரிவுக்குழுவை பகிஷ்கரிப்பதாகவும் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருந்தார். இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவு 7ஆம் திகதியின் பின்னர் எடுக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க நேற்றுக் கூறினார்.இத் தெரிவுக்குழுத் திட்டத்துக்கு ஜே.வி.பி. எதிர்ப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இந்த நிலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான பிரேரணை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் பட்சத்தில் நாடாளுமன்றச் செயற்குழு அமைப்பதில் ஏதாவது சிக்கல் நிலை ஏற்படுமா என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனிடம் கேட்டபோது, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், அக்கட்சிகளின் அங்கத்துவம் இல்லாமலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுமானால் அதில் சட்டச் சிக்கல் தோன்றாது என கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply