விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக முதலில் அறிவித்த நாடு அமெரிக்கா.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார். சென்னை பல்கலைக் கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கலந்துகொண்டு `இலங்கை பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ராணுவ நடவடிக்கைகள் மூலமோ, சட்ட நடவடிக்கைகள் மூலமோ மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வுக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் இதைச் சொல்கிறோம்.
இலங்கை அரசு, தனது சட்ட திட்டங்களுக்குஉட்பட்டு, சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன. அதற்கு வசதியாக புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுவின் பணிகளை செயல்படுத்த இலங்கை அரசு முன் வர வேண்டும்.
சிங்கள மக்களில் ஒருசாரார் முதலில் விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டு, அதன்பின்னர் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்து.
இலங்கை தமிழர்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு இரையாகாதவாறு வேலைவாய்ப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
போரினால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய ஐ.நா. அமைப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக முதலில் அறிவித்த நாடு அமெரிக்காதான்.
இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் ஆகிய முத்தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது சாத்தியம்தான். தற்போது இதற்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் இலங்கை சொர்க்க பூமியாக மாறும். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டால் இலங்கையின் நிலையே மாறிவிடும். இவ்வாறு அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார்.
முன்னதாக, அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரெட்ரிக் கெப்லான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பல்கலைக்கழக பாதுகாப்பு கல்வித்துறைத் தலைவர் மால்வியா நன்றி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply