வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும்

இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா எவ்வகையிலும் தலையிடாது. அதேநேரம், இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட உதவிகளையும் செய்யுமென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புதுடில்லி சென்றுள்ள பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த அவர் நேற்று முன்தினம் நீண்ட நேரம் உரையாடினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதில் இந்தியா மிகவும் உறுதியுடனும் ஆர்வமாகவும் இருக்கிறது. இதற்காக எத்தகைய அழுத்தங்களையும் இந்தியா கொடுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கான 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “13வது திருத்தத்துக்கும் கூடுதலான அதிகாரங்களுடன் ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது” என்றார்.

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் அக்கறையுடன் இருக்கிறது என்று கூறிய திருமதி நிருபமா ராவ்; இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு இந்திய அரசு மிகவும் ஒத்துழைத்து வருகிறது. அதேபோல, இலங்கை முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில் ‘பெரிய அண்ணன்’ (Big Brother) என்ற நிலையில் இந்தியா இருக்க விரும்பவில்லை. பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுடனும் இந்தியா நட்புறவுடன் இருந்து செயற்படவே விரும்புகிறது.

இந்தியப் பொருளாதாரம் மிகவும் முன்னேற்றமாக இருக்கிறது. அதேபோல, இலங்கைப் பொருளாதாரமும், சிறப்புற இந்தியா உதவி செய்யும்’ என்றும் நிருபமா ராவ் சுட்டிக்காட்டினார். தினகரன் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் எழுப்பிய கேள்வியொன்று க்குப் பதிலளித்த திருமதி நிருபமா ராவ்:-

“13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மக்களும் இலங்கை அரசாங்கமுமே தீர்மானிக்க வேண்டும். அந்த நாட்டிடமே அதற்கான முழுப் பொறுப்பும் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சமீபத்தில் கொழும்பில் சந்தித்த போது இதனையே வலியுறுத்தினோம்” என்றார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு

வடக்கு, கிழக்கு இணைப்புபற்றி தெரிவித்த வெளிவிவகாரச் செயலர்,

1987 இல் இந்தியா வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் யோசனையை முன்வைத்தது. இப்போது, இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவாக வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமும், அங்குள்ள அரசியல் கட்சிகளுமே இது தொடர்பாகத் தீர்மானிக்க வேண்டும். இந்தியா, எவ்வகையிலும் தலையிடாது.

எதுவாயினும்,

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் குறிக்கோள், இலங்கையில், தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கி, ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் தீர்வை எட்டும் பொறுப்பு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

“இலங்கை யுத்தத்தில் வெற்றி கண்டுவிட்டது. ஆனால் சமாதானம் ஏற்படுத்துவதில் இன்னும் வெற்றி கொள்ளவில்லை. இதில் வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மீனவர் பிரச்சினை

இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பத்திரிகை ஆசிரியர்கள் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ‘இருநாட்டு மீனவர்களது பிரச்சினை மிகவும் மனிதாபிமானமுடையது. அவர்கள் மிகவும் வறுமை நிலையில் வாழும் அப்பாவிகள். சில சந்தர்ப்பங்களில், தெரிந்தோ, தெரியாமலோ எல்லைதாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்.

ஆனால், துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை எந்த வகையிலும் ஏற்கவும் முடியாது. இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் இலங்கை, இந்திய கூட்டுக்கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் மார்ச்சில் நடந்தது” எனக் கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர், மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய உயர் அதிகாரிகள் இலங்கையுடன் பேச்சு நடத்தியுள்ளனர். சமீபத்தில் இந்தியா வந்த அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤டனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

“இந்தியச் சிறைகளில் இப்போது இலங்கை மீனவர்கள் இல்லை. சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளத்தில் ஒரு சிலர் சிறையில் இருக்கின்றனர். கூடிய விரைவில் அவர்களும் விடுவிக்கப்படுவர்” எனவும் திருமதி நிருபமா ராவ் விளக்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply