சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது எமது கட்சியின் தீர்மானம்: அரியநேத்திரன்

மட்டக்களப்பு பாசிக்குடாவில் ஹோட்டல் அமைத்து மாலு மாலு என பெயரிட்ட நீங்கள், அம்பாந்தோட்டையில் ஹோட்டல் அமைத்து அதற்கு மீனு மீனு என்று பெயர் சூட்டுவீர்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. பா. அரியநேத்திரன் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது கூட்டமைப்பின் தீர்மானம். அதற்காக மட்டக்களப்பில் ஹோட்டல் அமைத்து அதற்கு மாலு மாலு என்று பெயர் சூட்டுமாறு நாம் கூறவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கு 2,000 கோடி ரூபா நிதியொதுக்கீட்டு குறை நிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அரியநேத்திரன் எம்.பி. உரையாற்றிக் கொண்டிருக்கையில், அவருக்கும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ் இனவாதம் பேசுவதாக அமைச்சர் கூறிய அதேவேளை, தமிழ்ப் பகுதிகளில் சிங்களப் பெயர்களை சூட்டுவதுதான் சிங்கள இனவாதம் என அயநேத்திரன் எம்.பி. கூறினார். இதனால், இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக உரையாற்றிய அரியநேத்திரன் எம்.பி., உல்லாசத்துறையை ஊக்குவிப்பதாகக் கூறி மட்டக்களப்பின் பாசிக்குடாவில் ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்ப் பிரதேசங்களில் அமைக்கப்படுகின்ற ஹோட்டல்களுக்கு பெயர் சூட்டுவதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு ஹோட்டலுக்கு மாலு மாலு என்று பெயரிடப்பட்டுள்ளது என கூறினார்.

இதன்போது இடைமறித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே கூறுகையில், ஹோட்டல் ஒன்று மாலு மாலு என்று பெயர் வைத்தது இனவாதமா? அது பெயர் மட்டும்தானே. ஹோட்டலை அமைத்தவர் தனது விருப்பத்தின் பேரில் பெயரைக் கூட வைக்கக்கூடாது என்று கூறுவது தான் இனவாதம் என தமிழில் கூறினார்.

இதனை மறுத்த அரியநேத்திரன் எம்.பி., தமிழ்ப் பகுதியில் ஹோட்டல் அமைத்து அதற்கு ஏன் மாலு மாலு என்று பெயர் வைக்கவேண்டும்? மீனு மீனு என்று பெயர் வைத்திருக்கலாம் அல்லவா என வினவினார். இதன்போது இடைமறித்த அமைச்சர் மஹிந்தானந்த, அப்படியெனில் கொழும்பிலுள்ள தமிழ்க் கடைகளுக்கெல்லாம் சிங்களத்தில் தானே பெயர் வைக்கவேண்டும். அத்துடன், ஹில்டன் மற்றும் ஒபரோய் ஆகிய ஹோட்டல்களுக்கு சிங்களத்தில் அல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த அரியநேத்திரன் எம் .பி., அப்படியானால் அம்பாந்தோட்டையில் ஹோட்டல் அமைத்து அதற்கு மீனு மீனு என்று தமிழ்மொழியில் பெயர் வைப்பீர்களா? தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகின்றது. இதனை சுட்டிக்காட்டுவதற்கு இடமளிக்க மறுக்கிறீர்கள். இதுதான் சிங்கள இனவாதம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் சரி, அதிருக்கட்டும். ஜனாதிபதித் தேர்தலின் போது ஏன் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தீர்கள் என கேட்டதற்குப் பதிலளித்த அரியநேத்திரன் எம்.பி., சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது எமது கட்சியின் தீர்மானமாகும். பொன் சேகாவுக்கு ஆதரவளித்தோம் என்பதற்காக பாசிக்குடாவில் ஹோட்டல் அமைத்து அதற்கு மாலு மாலு என்று கூறவில்லை என்றார்.

இதன்போது எழுந்த அமைச்சர், வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றுவருகின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டீர்கள். ஆனால், இனவாதம் மட்டும் பேசுவீர்கள். உங்களைத் திருத்த முடியாது என்று கூறியதுடன் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். இதனையடுத்து, அரியநேத்திரன் எம்.பி. தனது உரையைத் தொடர்ந்தார்.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவந்து இரண்டு வருடங்களான போதிலும் சிறையிலுள்ள 860 தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதி தனது 14 வயதில் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு இன்று 32 வயதாகின்றபோதிலும் விடுதலையில்லை. போராட்டத்தில் களமிறங்கி ஆயுதமேந்தியவர்கள் இன்று அமைச்சர்களாகவும், சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பவர்களாகவும் உள்ளனர்.

ஆனால், அப்பாவி மக்கள் சிறையில் வாடுகின்றனர். வடக்கில் இன்னும் அச்ச சூழல் நிலவுகிறது. அத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட வகையில் மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வங்கிக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றில் லங்காவின் பிரதமர், விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் இன்னும் நடமாடுகின்றனர். அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

இப்படியிருக்க, மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையானது அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காகவா அல்லது விடுதலைப்புலி உறுப்பினர்கள் இன்னும் நடமாடுகின்றனர் என்பதை நிரூபிப்பதற்காகவா இடம்பெற்றது என்ற சந்தேகம் எம்மில் தோன்றியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவான குழு ஒன்றே இந்த வங்கிக் கொள்ளையை மேற்கொண்டுள்ளது என்று மட்டக்களப்பு இராணுவத் தளபதி கூறியுள்ளார். அவரது கூற்று வரவேற்கத்தக்கது. அப்படி இருந்தும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்ரூசூ65533; என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply