சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்காது : நிமல்

ஐரோப்பா, சர்வதேசம் ஆகியவற்றின் அழுத்தங்களுக்கு அஞ்சி அரசாங்கம் அரசியல் தீர்வை முன் வைக்காது. சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் தற்போது தெளிவாகின்றன என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கில் இருக்கும் அடிப்படைவாதிகள் கூடுதல் அதிகாரங்களை கேட்கின்றனர்.

தெற்கிலும் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அவர்களை வடக்கு கிழக்கிற்கு கூடுதலான அதிகாரங்களை வழங்க வேண்டாம் என்று கூக்குரல் இடுகின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் இரு தரப்பினரையும் பற்றி சிந்திக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மட்டுமே வாழவில்லை. சிங்கள, முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். அவர்களை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அதற்காகவே கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கலந்துரையாடல்கள் மூலமாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். சமஷ்டி முறையிலேயே தீர்வு காண வேண்டும் என ஐ.தே.க. கூறுகின்ற போதிலும் அதற்கான யோசனைகள் முன் வைக்கப்படவில்லை. எடுத்த எடுப்பிலேயே அரசியல் தீர்வை முன் வைப்பதற்கு அது ஒன்றும் “கொத்து ரொட்டி அல்ல’ ஐ.தே.க. கூறுவதை போல சமஷ்டி தீர்வை அரசாங்கம் ஒரு போதும் பெற்றுக் கொடுக்காது.

சர்வதேச அழுத்தத்திற்கு அரசாங்கம் ஒரு போதும் அடி பணியாது. அதேபோல இந்தியாவும் எதனையும் இலங்கை அரசாங்கத்தின் மீது திணிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறே ஆலோசனை வழங்கியுள்ளது.

சர்வதேசம் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. அதற்கு அஞ்சியும் ஐரோப்பாவிற்கு பயந்தும் நாம் தீர்வினை முன் வைக்கமாட்டோம். அதற்கு நாம் தயார் இல்லை. சகலருடனும் கலந்துரையாடியே தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply