இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி : ஐ.தே.க
இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு அதை மறுத்து வருகின்றது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எம்மிடம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் தற்போது நிலவுகின்ற நிலவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.இந்தப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியபோதே லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியன வலியுறுத்தி வருகின்றன. இதில் அரசு பொறுப்புடன் செயற்படவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க புத்திஜீவிகள் குழு, சர்வகட்சிகள் பிரதிநிதிகள் குழு ஆகியவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார். அந்தக் குழுக்களினால் பிரேரிக்கப்பட்ட யோசனைகளை ஐக்கிய தேசியக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றன. ஆனால் அரசு அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க அரசு முயற்சித்து வருகிறது.இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீர்க்கமான இணக்கப்பாட்டுக்கு வந்தால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆரவளிக்குமே தவிர இடையூறாக இருக்காது. அதேபோன்று, இனப்பிரச்சினைக்கு இந்த வருடத்துக்குள் அரசு தீர்வு வழங்காவிட்டால் இலங்கை பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் என்பது உறுதி.
இதேவேளை, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஆனால் தான்தோன்றித்தனமாக அரசு அதை அமுல்படுத்தியது. இருந்தும், சர்வகட்சிகள் பிரதிநிதிகள் குழு மற்றும் புத்திஜீவிகள் குழு ஆகியவற்றின் யோசனைகளை நாம் ஆதரித்தோம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த அரசு முன்வரவில்லை. அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏன் அரசு அரசியல் தீர்வு வழங்க முடியாது?புதிய இராணுவத் தலைமையகம் நிர்மாணிக்க 20 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையை அரசு நேற்று நாடாளுமன்றில் கொண்டுவந்தது. யுத்தத்தால் வீடுகளை இழந்து முகாம்களில் மக்கள் உள்ளனர். மலையகப் பகுதிகளிலும் பலர் வீடுகளின்றி வாழ்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் அமைக்க 20 பில்லியன் ரூபா ஒதுக்குவது முக்கியமா?
வடக்கிலும், கிழக்கிலும் இன்று இராணுவ ஆட்சியே நிலவுகின்றது. அனைத்து விடயங்களிலும் இராணுவம் தலையிடுகின்றது. அங்கு நிலவுகின்ற இராணுவ ஆட்சியை அகற்றி தமிழ் மக்களுடன் நல்லெண்ண சமூக உறவை அரசு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன், அந்தந்த மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply