நாடு கடந்த தமிழீழம் உலகில் எங்கும் கிடையாது : அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
நாடு கடந்த தமிழீழம் உலகில் எங்கும் கிடையாது. அதனை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமக்கேயுரிய பொருளாதார மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எமது நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதற்கான நோக்கத்தில் சர்வதேசத்தை தொடர்புபடுத்தி இந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துவருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் அது வெற்றி கொள்ளப்படுவதற்காக இந்தியா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரியளவிலான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்கியிருந்தது. அது தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்து விடவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தின் மீது இந்தியாவின் அழுத்தம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
செனல் 4 வீடியோ காட்சிகள் ஜெனீவாவிலும் காட்டப்பட்டன. அங்கு அந்த காட்சி ஒளிபரப்பப்பட்டதும் அவர்கள் அதனைப் பார்த்ததும் அவர்களுக்குரிய உரிமையாகும். குறித்த வீடியோவை நானும் பார்த்தேன். குறித்த வீடியோ மற்றும் ஓடியோ தொகுப்புக்களில் சந்தேகங்கள் நிலவுகின்றன. அந்த வீடியோ ஓடியோவில் தமிழ் மொழியில் பேசுவது தெளிவாக இருக்கின்றது. எனவே, இதனை உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எமது நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எனவே, இலங்கைக்கு சொந்தமான நாம் அனைவரும் இணைந்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் செயற்பட வேண்டும்.
புலிகளின் அமைப்பு இராணுவ ரீதியில் தோல்வியடைந்துள்ளது. அவ்வாறு தோல்வியடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தற்போது எமது நாட்டின் மீது பொருளாதார ரீதியில் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
பொருளாதர வளத்திலும் நவீன தொழில்நுட்ப ரீதியிலும் பலம் பெற்றுள்ள மேற்படி புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இவ்வாறான வீடியோ காட்சிகளைத் தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.
இதன்மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்று வருகின்ற சர்வதேச உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் தடுத்துவிடுவதற்கும் எமது நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்துக்கு தள்ளிவிடப்படுவதற்கும் என சூழ்ச்சிகரமான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர். சர்வதேசத்தின் முன்னால் இலங்கையைப் பொருளாதார வீழ்ச்சி கண்ட நாடாக ஆக்கிவிடுவதே இதன் நோக்கமாகும்.
நாடு கடந்த தமிழீழம் குறித்து இங்கு பேசப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழம் என்ற நிறுவனம் ஒன்று உலகில் எங்கும் கிடையõது. அ“வ்வாறு ஒரு நிறுவனம் செயற்படுவதாக நாம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எனவே, இல்லாத ஒரு நிறுவனத்தினால் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாத நிறுவனத்தினால் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாரில்லை. அவ்வாறு பதிலளிக்கும் தேவையும் கிடையாது. பதிலளித்து அவ்வாறு ஒரு நிறுவனம் இருப்பதாக அங்கீகரிப்பதற்கும் அரசாங்கத்திற்கு அவசியம் இல்லை.
எந்தவொரு நாடும் தமது பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் பூகோள ரீதியாக, பிராந்திய ரீதியாகவே செயற்பட வேண்டியிருக்கின்றது. அந்த வகையிலேயே இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
சில சந்தர்ப்பங்களில் இந்தியா தனது தேவைக்காக செயற்படலாம். இதனை மறுக்க முடியாது. அதேபோல் நாமும் எமது தேவைகளினிமித்தம் செயற்பட்டு எமக்குத் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு அடிபணிந்து விடவில்லை. மாறாக இரு நாடுகளும் பூகோள ரீதியில் இணைந்து செயற்பட்டுவருகின்றன. அத்துடன் இலங்கை அதன் தனியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன் காரணத்தாலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனவே, பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது காலத்தை வீணடிக்கும் செயற்பாடு அல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளமைத்து அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் இருந்து அரசாங்கம் விலகிச்சென்று விடமுடியாது.
அந்த வகையில் தெரிவுக்குழுவின் தீர்மானங்கள் அரசியல் யாப்பு ரீதியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது அனைத்து சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவும் அமையப்பெற வேண்டும்.
30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தற்போது தமது பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அ“த்துமீறி நுழைந்து மீன்களை அள்ளிச்செல்வது நியாயமாகாது. இவ்வாறான நிலையில்தான் நாம் தலையிட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதற்காக நாம் யாருக்கும் எதிரிகள் எ“ன்ற கருத்தினைக் கொள்ள முடியாது.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை பாரியதாகும். இவர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுக்களின் மூலமே தீர்வுகாண வேண்டும். இது தொடர்பில் பேசுவதற்கென இலங்கை இந்திய கூட்டுக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று ஆகஸ்ட் மாதத்தில் கொழும்பில் இடம்பெறுகின்றது.எந்த சந்தர்ப்பத்திலும் மீனவர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது. இதுவே எமது நிலைப்பாடு.
இந்தியாவுடனான எமது உறவினை தவறான கோணத்தில் பார்க்கக்கூடாது. இராணுவ ரீதியில் எமக்கு உதவிகளை வழங்கிய இந்தியா பொருளாதார ரீதியிலும் உதவி வருகின்றது. அதுமட்டுமல்லாது தற்போதும் இந்தியா இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கி வருகின்றது,
இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பெரிய அண்ணாவைப்போல் செயற்பட்டு வருவதாகக் கூறுவது தவறாகும்.
இந்திய தலைவர்கள் இலங்கை தொடர்பில் சிறந்த கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு தலைவரும் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வில்லை.
இந்நிலையில் இந்தியாவைப் பற்றி சந்தேகிப்பதோ தவறாகப் பேசுவதோ அரசியல் தந்திரமாகாது. இன்று இந்தியாவானது எமது நாட்டின் பாரிய பொருளாதார நண்பனாக இருந்து வருகின்றது. இந்தியாவை பகைத்துக் கொண்டு எம்மால் எந்தத் துறையிலும் முன்னேற்றத்தைக்காண முடியாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply